எம்பெருமானின் கல்யாண குணங்கள்



Wednesday, May 11, 2011

1. எம்பெருமானின் ஸ்வரூபம்

1.1 எம்பெருமானின் திருமேனி ஸௌந்தர்யம்

1. முடிச்சோதியாய் ஒளி படைத்த கிரீடத்தை தரித்தவன்
2. அப்போதலர்ந்த செங்கமலங்கள் போன்ற திருக்கண்களை உடையவன்
3. சிவந்து கனிந்த அதரங்களை உடையவன்
4. செம்பவளப்பெட்டியிலே முத்துக்கள் வைத்தாற்போல பற்களை உடையவன்
5. திவ்யமான ஒளியுடைய செம்பொன் திருமேனி கொண்டவன்
6. திவ்ய பீதாம்பரத்தை தரித்தவன்
7. பொன் நிறமுடைய மலர்மகளை திரமார்பில் உடையவன்
8. தன் நாபி கமலத்தில் பிரமனை அமர்த்தியுள்ள பத்மநாபன்
9. நீங்கிய இடத்தை ருத்ராதி தேவர்களுக்குக் கொடுத்தவன்
10. நான்கு திருக்கைகளில் சங்க சக்ராதி திவ்ய ஆயுதங்கள் தரித்தவன்
11. பஞ்சாயுதங்களையே ஆபரணமாகக்கொண்டவன்
12. யக்ஞோபவீதம், திருவாபரணங்கள், அழகிய ஹாரங்கள் அணிந்தவன்
13. திருத்துழாய் மாலையை விரும்பி அணிந்தவன்
14. செந்தாமரையை தோற்கடிக்கும் கழல்களுடைய பத்மபாதன்
15. நம் துயர் தீர்க்கும் ஜோதிமயமான திருவடிகளை உடையவன்
16. தேவிமார்கள் பாத ஸேவை செய்ய சயனித்து இருப்பவன்

17. சுடர் மிகு மரகத மலை போன்ற அழகுத் தோற்றம் உடையவன்
18. சூர்யனும் மங்கும்படியான தேஜோமயமான தேவதேவன்

19. வேதாத்மாவான கருடனை தன் வாகனமாகக்கொண்டவன்

திருவாய்மொழி 2.5


அவன் மார்வம் திரு இருக்கும் இடம். தாமரை பூவில் பிறந்த பிராட்டி அதைவிட்டு இவன் திருமார்பை பற்றிக்கொண்டு ‘அகலகில்லேன்’ என்று கிடக்கின்றாள்; அவன் கொப்பூழ் பிரமன் இருக்கும் இடம்;. நீங்கினவிடமோ ருத்ரனுடையதாயிருக்கின்றது. 2.5.2

பிராட்டி பிரமன்சிவன் முதலானார் மாத்திர மன்றியே ஸகலலோகங்களும் ஸகலசேதநாசேதநங்களும் அவனைப்பற்றியே நிலைநிற்கின்றன. அவனுள் கலவாதது எப்பொருளுமில்லை. 2.5.3

அமரர்களென்ன, ஸகல சேதன அசேதநப் பொருள்களென்ன எல்லா நாரங்களையும் தன்னுள்ளே வைத்துள்ளதனாலேயே நாராயணனென்னுந் திருநாமம் படைத்தவனானான் 1.3.3

இப்படி தான் ஒரு மரகதமலையோ என்னலாம்படி யிருக்கிறான்.

இப்படிப்பட்ட எம்பெருமான் வாழ்நாள் முழுவதும் அநுபவித்தாலும் கூஷணந்தோறும் புதியனாய்ப் ஸர்வகாலமும் அபூர்வ வஸ்துபோலே பரம போக்யனாய் புதியனாயிருந்து தெவிட்டுகின்றானில்லை; 2.5.4

வானோர்க்கும் மண்ணோர்க்கும் கொள்ளக் கொள்ளக்குறையாத மஹாநிதிபோல * கொள்ளமாளாவின்ப வெள்ளமாய் எப்போதும் அநுபவிக்க உரியனாயிருக்கும் எம்பெருமானை எத்தனைகாலம் அனுபவித்தாலும் த்ருப்தி பிறவாது. 1.7.2

பரமபத்த்திலிருக்கும் பரம் பொருளான இப்படிப்பட்ட எம்பெருமானுக்கு பலபல விலக்ஷணமான நாமங்களும் ரூபங்களும் உண்டு; .1.3.4

அவனுடைய திருக்குணங்களுக்கும், திருவவதாரங்களுக்கும் திவ்ய சேஷ்டிதங்களுக்கும், வாசகங்களான திருநாமங்களும் பலபல. அவன் ஞானமும் பலபலவே.

கிண்கிணியும் அரையில் தங்கிய பொன்வடமும் பொன்மணியும் தோள்வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும்” என்கிறபடியே அவன் திருவாபரணங்கள் எண்ணிறந்தவை.

இவனுடைய கண்டுகளிக்கப் பெறுவதான திருவடிவுகளும் பல பல.

நாம் அவனை அனுபவிக்குங் காலத்தில் நம் பஞ்சேந்திரியங்களும் திருப்தி பெரும் விதமும்
கண்டு இன்பம், கேட்டு இன்பம் என்று பலவகைப்பட்டது.

இப்படி எம்பெருமான் நித்ய ஆநந்த த்ருப்தனாய் “தாம் தம் பெருமையறியார்” என்றும் “தனக்கும் தன் தன்மையறிவரியான்” என்னும் சொல்லுகிறபடி எழுந்தருளியிருக்கிறான். 2.5.6

இப்படி வெள்ளை வெள்ளத்தின் மேலே ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன்மேலே கள்ள நித்திரை கொள்கின்றது எங்கள் பெருமானே. 2.5.7

ஆக அத்வைதிகள் சொல்வதுபோல் நம் பெருமான் நிராகார ப்ரம்மம் இல்லை. அவன் திவ்யமங்கள் விக்ரஹத்தை உடையவன். 1.1.1


1.2. எம்பெருமானின் பரத்வம்


எம்பெருமான் நித்யஸூரிகளுக்கு நியாமகன்.
எதிர்நிகழ்கழிவு என்னும் முக்காலங்களிலும் ஒப்புயர்வற்றவன்
ஆனால் கண்களால் காணப்பட முடியாதவன்.
அதேபோல். காதுகளால் கேட்கப்படமுடியாதவன்.
நம் இந்திரியங்களுக்கும் விஷயமாகாதவன்.

மற்ற ஜீவாத்மாக்கள் நம்மால் க்ரஹிக்கப்படுவதுபோல் பரமாத்மா க்ரஹிக்கப்பட முடியாதவன்.

நேராக அவனை அறிய முடியாமையாலே எப்போதும் உபமானந்தாலேயே அறியப்படுபவன். அவனுக்கு ஸமானமானவர்களோ, மேற்பட்டாரோ யாருமில்லை. 1.1.2

இவனிடம் இது இல்லை என்று சொல்ல முடியாதபடி, எல்லாம் தன்னகத்தே கொண்டவன். ஸர்வ லோகத்திலுமுள்ள ஸகல சேதநாசேதநங்களின் ஸ்வரூபம் எம்பெருமானுடைய அதீநம்.

இவற்றின் ஸ்வரூபம் அவனதீதமாயிருக்கையாவது ஸ்ருஷ்டிகாலத்திலே எம்பெருமான்தானே இவற்றையுண்டாக்கியவன்.

எம்பெருமான் எல்லா உலகங்களுக்கும் ஸர்வஸ்வாமி.


1.3. எம்பெருமானே ஸர்வ ச்ருஷ்டிகர்த்தா


ஸ்ருஷ்டியையும் ஸம்ஹாரத்தையும் பிரமனும் சிவனும் செய்வதாக சிலர் நினைப்பது தவறு. 1.1.8

எதுவுமே இல்லாமலிருந்த காலத்திலே முந்துற முன்னம் நான்முகனைப்படைத்து,
நீ வானோர் பலரும் முனிவருமான யோனிகளைப் படையென்றான்- அதாவது, ஸப்த ரிஷிகள் தசப்ஜாபதிகள் ஏகாதச ருத்ரர்கள் த்வாதசாதித்யர்கள் அஷ்டவஸுக்கள் என்றிப்படிச் சொல்லப்பட்டுள்ளவர்களும் விலக்ஷண ஜன்மங்களை யுடையவர்களும் தத்தமது அதிகாரங்கட்கு ஏற்ற ஸ்ருஷ்டி முதலியவற்றை நன்கு அறிந்திருப்பவர்களுமான சிறந்த வ்யக்திகளை நீ படையென்றான். 1.5.3

எல்லாம் ஸ்ருஷ்டித்து பிரமன் ருத்ரன் தேவஜாதிகள் அவர்களுக்கு இருப்பிடமான லோகங்களையும் மூவுலகங்களையும், சேதநவர்க்கங்களையும் ஸ்ருஷ்டித்தது இவனே.

பஞ்சபூதங்களாகிய ஆகாசம் அக்நி வாயு ஜலம் பூமி என்கிற ஸகல பதார்த்தங்களும் எம்பெருமானே. 1.1.7

மூவகைக் காரணமுமாயிருந்து ப்ரபஞ்சஸ்ருஷ்டியை பண்ணினது அவனே
தனிமுதலாகிய மூலப்ரக்ருதியும் அவனே
முக்கட்பிரான் அவனே, திசைமுகன் அவனே,
அமரரும் அவனே, அமரர்கோனும் அவனே.

ஸ்வர்க்கம் மோக்ஷம் முதலிய ஸகல புருஸார்த்தங்களுக்கும், நரகம் முதலிய அபுருஷார்த்தங்களுக்கும், தேவாதி ஸகல ஆத்மவர்க்கத்துக்கும், தாரகனாய்க் காரணபூதனாய், நியாமகனாய், ஸஹகாரி காரணம் நிமித்தகாரணம் உபாதாநகாரணம் என்கிற மூவகைக் காரணங்களும் தானேயாய் நிற்பவன். 2.8.10



1.4. எம்பெருமானின் வ்யாபகத்வம்


ஒருவனைப் பிடிக்க வேண்டி ஊரை வளைவாரைப்போல தம்மை விஷயீகரிப்பதற்காக எங்கும் வியாபித்து ஸர்வாந்தர்யாமியாயிருப்பவன் ஸ்ரீமந்நாராயணன். 1.8.9

எங்கும் பரந்து குளிர்ந்திருந்துள்ள கடலில் நீர்த்திவலைகள்தோறும் வியாபித்திருப்பவன். பூமியிலும் ஆகாசத்திலும் அப்படியே. எம்பெருமான் எங்கும் நீக்கமற வ்யாபித்து இருக்கிறான். 1.1.10

ஸர்வலோகங்களிலுமுள்ள ஸகல பதார்த்தங்களினுடையவும் ஸ்வரூபம் எம்பெருமான் அதீநம். புலப்படும் ஒரு வஸ்துவு மொழியாமல் ஸகல வஸ்துக்களிலும் வியாபித்து அந்தர்யாமியா யிருப்பவன். 1.1.5

ஆனால் ஸகல பதார்த்தங்களோடும் அந்தராத்மாவாயக் கலந்து நின்றானேயாகிலும் அவைகளின் தோஷங்கள், ஸுகதுக்கங்கள் தன்மேல் தட்டப்படாமல் இருப்பவன். 1.1.3

எங்கும் பரந்துள்ள ஒவ்வொரு பொருளிலும் சரீரத்தில் ஆத்மா உறையுமாபோலே மறைந்திருந்து எல்லாவற்றிலும் தனித்தனியே குறைவற வியாபித்திருக்கிறான் எம்பெருமான்.

வஸ்துக்களின் உட்புகுந்து அவைகளை ஒரு வஸ்துவாகவும் ஒரு பெயருடையதாகவும் ஆக்கினவன் இவனே. 1.1.4

அக்னி, இந்திரன், சிவன், பிரமன் முதலிய தெய்வங்களெல்லாவற்றிற்கும் அந்தர்யாமி இவனே. 1.1.5 இவர்கள் எல்லோரையும் நிர்வஹிப்பவனும் அவனே

பிரமன் முதலானார்க்கு இட்ட காரியங்களை அவர்கள் வழியாலே தானே நடத்தியும், தன் தலையில் வைத்துக்கொண்ட காரியங்களையும் தானே நடத்தியும் போகையாலே அவனுடைய தொழில்கள் எங்கும் காணலாயிருக்கும்.2.8.3

ப்ரம்ம ருத்ராதி கடவுளர்களென்ன, ஸகல சேதன ஆசேதனப்பொருள்களென்ன, ஆகிய எல்லாம் தான் என்கிற சொல்லுக்குள்ளே அடங்கும்படி செய்து அதனாலேயே நாராயணனென்னுந் திருநாமம் படைத்தவன். 1.3.3

இங்கு ஒரு ரஸமான விஷயம் தெறிந்துகொள்ளத்தக்கது.

எம்பெருமான் எங்கும் நீக்கமற வ்யாபித்து இருக்கிறான் என்று ப்ரஹ்லாதாழ்வான் சொன்னதை இரணியன் நம்பவில்லை. அதை சோதிக்கப்போய் அவன் மாண்டான் என்பது ஜகத் ப்ரஸித்தம்

வேறேயொரு தூணிலிருந்து நரசிங்கமூர்த்தி தோன்றினால், முன்னமே ஒரு நரசிங்கத்தை உள்ளே வைத்து நாட்டிய தூண் அது என்று சொல்லிவிடக் கூடுமாகையாலே, அந்த வார்த்தைக்கு இடமில்லாதபடி, அந்த இரணியன் தானே நாட்டிய தூணிலிருந்தே திருமால் நரசிங்கமாய்த் தோன்றினானென்பதும்,

வேறு யாரேனும் கையால் தட்ட அத் தட்டியவிடத்திலிருந்து தோன்றினால் ‘அவர் தம் கையில் நரசிங்கத்தை அடக்கிக் கொண்டு வந்து தூணிலே பாய்ச்சினார்” என்று சொல்லிவிடக் கூடுமாகையாலே, அந்த வார்த்தைக்கு அவகாசமில்லாதபடி அவ்விரணியன் தானே தன் கையால் தட்டினவளவில் திருமால் தோன்றினானென்பதும்,

அவன் ஓரிடத்தில் தட்ட மற்றோரிடத்திலிருந்து நரசிங்கம் தோன்றினால் ‘எங்குமுளன்’ என்று ப்ரஹ்லாதன் செய்த பிரதிஜ்ஞை தவறி ‘நீ சொல்லுகிறவன் இங்கில்லை’ என்று இரணியன் செய்த பிரதிஜ்ஞை நிலை நிற்குமாகையாலே, அதற்கு இடமில்லாதபடி அவன், தட்டின இடத்திலிருந்தே திருமால் தோன்றினானென்பதும்,

அவன் தட்டினபிறகு சிறிதுபோது கழித்து நரசிங்கம் தோன்றினால் ‘நான் தட்டினபொழுது திருமால் அங்கில்லை’ என்று அவன் சொல்லி, திருமால் எங்கும் எப்பொழுதும் எல்லாப்பொருள்களிலும் உள்ளும் புறமும் வியாபித்திருக்கிற உண்மை நிலையை மறுக்கக் கூடுமாகையாலே, அதற்கு இடம் அறும்படி கர்ப்பம், கரு முதிர்தல், ப்ரஸவித்தல் குழந்தாயாய் ஜனித்தல், பிறகு நாளடைவில் வளர்தல் என்பனவுமில்லாமல், இரணியனைவிட பருத்து வளர்ந்த வடிவையுடையவனாய், அப்பொழுதே தோன்றினனென்பதும்

அங்ஙனம் தோன்றியவிடத்தும் ஹிரண்யன் ஜயசீலனாகவும் நரஸிம்ஹன் பராஜிதனாகவும் நேர்ந்தால், ‘எங்குமுளன்’ என்ற உண்மை நிலைத்தாலும், பரத்வம் ஸித்தியாமற் போய்விடுமாதலால், அங்ஙனமாகாதபடி அக்கொடியவனைத் தவறாது அழித்தனனென்பதும்,

இவைபோன்ற பல விசேஷங்கள் நரஸிம்மாவதாரத்திலே அருமையாக நோக்கத்தக்க விஷயங்களாம்.

ஆகவே எம்பெருமானுடைய வ்யாபகத்வத்திலே ஸந்தேகம் உடையோர் இரணியன் கதையிலிருந்து பெருமான் எங்கும் வ்யாபித்துள்ளான் என்பதில் தெளிவு பெறவேண்டும் என்கிறார் ஆழ்வார். எம்பெருமானுடைய வ்யாபகத்வத்தை நம்பாதவர்கள் இரணியன் அடைந்த கதியையே அடைவார்கள் என்றும் ஆழ்வார் சொல்கிறார். 2.8.9


1.5. எம்பெருமானே ஸர்வ ரக்ஷகன்


ஸர்வ லோகத்திலுமுள்ள ஸகல சேதநாசேதநங்களின் ரக்ஷணமும் அவன் அதீநம்.

பிரளயகாலத்திலே இவற்றையெல்லாம் தன் வயிற்றிலே வைத்து காத்தவன் இவனே. 1.1.4

இவ்வுலகில் ரக்ஷகர்களென்று பேர் சுமப்பவர்கள் பலவகைப்பட்டு இருப்பர்.
ஒருவன் ஒரு வீட்டுக்கு ரக்ஷகனென்றிருப்பன்;
ஒருவன் ஒரு க்ராமத்துக்கு ரக்ஷகனென்றிருப்பன்;
ஒருவன் ஒரு நாட்டுக்கு ரக்ஷக்னென்றிருப்பன்;
ஒருவன் மூவுலகுக்கு ரக்ஷகனென்றிருப்பன்
ஒருவன் பதினாலுலகுக்கும் ரக்ஷ்கனாயிருப்பன்,

இந்த வ்யக்திகளில் எம்பெருமான் அந்தராத்மாவாய் நின்று நடத்துகையாலேயே இந்த ரக்ஷணங்கள் நடக்கின்றன. இவனுடைய அநுப்ரவேசமின்றி ஒருவராலும் ஒரு ரக்ஷணமும் பண்ண முடியாது. ஸம்பத்துக்களைச் சேமித்துக் கொடுப்பதிலும் ஆபத்துக்களைத் தவிர்த்தொழிப்பதிலும் எம்பெருமானுக்கன்றி மற்றொருவற்கும் சக்தியில்லை.

சேதநர்களினால் ஆச்ரயிக்கப்படும் மற்ற தெய்வங்கள் எம்பெருமான் தங்களிடத்தில் உள்புகுந்த்தனால்தான் தாங்கள் பலனளிக்கத் திறமை பெறுகிறார்கள்.

ஆக உலகத்தில் நடக்கிற ரக்ஷணத் தொழில் யாவும் எம்பெருமானுடையதே.

அக்னி, இந்திரன், சிவன், பிரமன் முதலிய இதர தெய்வங்களைக்குறித்து வழிபாடுகள் செய்து அவரவர்கள் தாம் தாம் கோரிய பலன்களைப் பெறுவதாகக் கண்டாலும் அதுவும் எம்பெருமான் தானே அத்தெய்வங்களுக்கு உள்ளீடாக இருந்து நடத்துகிற ரக்ஷணமே. அத்தெய்வங்களே ஸ்வதந்திரமாகச் செய்துவிடுகிற ரக்ஷணமன்று. 1.1.5

மகாப்ரளய காலத்திலே மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றுமெல்லாம் விழுங்கி வயிற்றில் வைத்து ரக்ஷித்த்தும் இவனே.


ஸம்ரக்ஷணம் ஸம்ஹாரம் முதலான எல்லாவற்றிற்கும், அத்விதீய காரணபூதன். ஸகல வஸ்துக்களுக்கும் தனி முதல்வன். மூவுலகுங் காவலோன் இவனே. 2.8.5

ஸர்வ லோகத்திலுமுள்ள ஸகல சேதநாசேதநங்களின் ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் எம்பெருமான் அதீநம். அதாவது, ஸர்வ லோகத்திலுமுள்ள ஸகல சேதநாசேதநங்களின் காரியங்களெல்லாம் எம்பெருமானுடைய ஸங்கல்பத்துக்கு அதீனம்.

கருமங்கள் யாவும் அவனிட்ட வழக்கு.
செய்கையும், பயனும் அவனிட்ட வழக்கு.
அந்தந்த க்ரியைகளை அனுட்டிக்கின்ற கர்த்தாக்களைப் படைப்பவனும் அவனே
சுவர்க்கமும் நரகமும் அவனிட்ட வழக்கு.

அதாவது, ஸகல சேதநாசேதநங்களுள்ளும் எம்பெருமான் அந்தர்யாமியாய் நிற்றலால் சரீர-சரீரி भाव ஸம்பந்தம் என்கிற விசிஷ்டாத்வைதக் கோட்பாடு. இங்கு புரிந்துகொள்ளத்தக்கது. 1.1.6


எம்பெருமானது அற்புதத் தொழில்கள் எப்படிப்பட்டவர்கட்கும் எல்லை காணமுடியாதவை அவன் தானே காட்ட காண்பார்க்குக் காணலாமேயல்லது, ஸ்வப்ரயத்நத்தாலே காணப்புகுவார்க்கு ஒரு நாளும் காணமுடியாது. 2.8.8

1.6. அழிப்பவனும் அவனே


நல்லோர்களைக் காப்பவனான அவன் தீயோர்களை அழிக்கவும் செய்கிறான். அவன் செய்த ஸம்ஹாரங்கள் ஜகத் ப்ரஸித்தம். மற்ற தேவனான பிரமன் வரம் கொதுத்து செருக்கெடுத்துத் திரிந்த இரணியனையும் ராவணனையும் அழித்தவன் நாராயணனே. யார் கொடுத்த எந்த வரமும் இவன் முன் பலிக்காது.

தேவர், மனிதர், விலங்குகள், தாவரம் என்னும் நால்வகைப் பிறப்புக்கிளிலுள்ளவற்றில் ஒவ்வொன்றினாலும் சாகாதபடியும் அவன் ப்ரஹ்மருத்ராதிகளிடத்திற் பெற்ற வரம் பழுதுபடாமைக்காக, நரங்கலந்த சிங்கமாய் ப்ரஹ்மஸ்ருஷ்டியினுட்படாமல், தன்னைத்தானே தோற்றுவித்துக் கொண்டு தோன்றினனென்பதும்

அஸ்த்ரஸஸ்த்ரங்களொன்றினாலும் சாகாதபடியும், ஈரமுள்ளதனாலும் ஈரமில்லாததினாலும் இறவாதபடியும், பெற்றவரம் வீண் போகாமே நகங்களினால் கீண்டு கொன்றனனென்பதும்,

பகலிலுமிரவிலுஞ் சாகாதபடி பெற்றவரம் பொய்ப்படாதபடி, அப்பகலிரவுகளின் ஸந்தியாகிய மாலைப்பொழுதிலே கொன்றனனென்பதும்,

பூமியிலும் வானத்திலும் சாகாதபடி பெற்ற வரம் மெய்யாகும்படி, தன் மடிமீது வைத்துக் கொன்றனென்றதும்,

வீட்டின் அகத்திலும் புறத்திலும் இறவாதிருக்கும்படி பெற்ற வரத்திற்கு விரோதமின்றி, வாசற்படி மீது வைத்துக் கொன்றானென்பதும்,

இவைபோன்ற பல விசேஷங்கள் நாதாயணனின் நரஸம்மாவதாரத்திலே அருமையாக நோக்கத்தக்க விஷயங்களாம்.

மற்றொரு தேவனான ருத்ரன் கொடுத்த வரத்தைக்கொண்டு ருத்ரனையே தாக்கிய பஸ்மாஸுரனை அழித்தவனும் நாராயணனே. எம்பெருமான் புத்தாவதாரம் எடுத்ததும் ருத்ரன் கொடுத்த வரத்தினால் நாசம் விளைவித்த அசுரர்களை அழிக்கவே.



1.7. எம்பெருமானின் எளிமை

மேற்சொன்ன ஒப்புயர்வற்ற மேன்மை இருக்கச்செய்தேயும் அதனை யெல்லாம் மறைத்துக்கொண்டு கோபாலக்ருஷ்ணனாய்த் திருவவதரித்தவன் 1.7.2

தான் இப்படி ஸர்வேச்வரனாக இருப்பினும் தன் மேன்மை பாராதே நீசர் திறத்திலும் வந்து தன்னைத் தாழவிட்டுக் கொடுக்கும் சீலம் எம்பெருமானுக்கு உண்டெண்பது குஹப்பெருமாள். ஸுக்ரீவன், சபரீ, குசேலர், கூனி, இடைச்சிகள், மாலாகாரர் என்று இப்படிப்பட்டவர்களின் சரிதங்களில் காணலாம். நீரின் ஸ்வபாவம்போன்ற ஸ்வபாவத்தையுடைய எம்பெருமான். நீரை நாம் எப்படியிழுத்தாலும் அப்படியெல்லாம் அது ஓடிவரும்; அதுபோலே எம்பெருமான் யார்க்கும் உடன்பட்டு வருபவன். 1.8.11

மேலும் எம்பெருமானே, எனக்கு மகனாய் நீ வரவேண்டும் என்று கேட்காதவர்களுக்கும் மகனாக பிறந்தான். அவன் திருவடி ஸம்பந்தம் கேட்காதவர்க்கும் த்ரிவிக்ரமனாக உலகளக்கும்போது, அவர்கள் சிரஸின்மீது திருவடி வைத்து அருளினான். 4.7.3

இன்ன யோநியில் தான் பிறப்பதென்று ஒரு ஸ்யவஸ்தை கொள்ளாமலே இன்ன சேஷ்டி தந்தான் செய்வது என்று ஒரு வ்யவஸ்தை கொள்ளாமையாலே பலவகைப்பட்ட அவதாரங்களைச்செய்து எளியனாய் நின்றான்.

இருந்தும் நாம் அவனைக்கண்டுகொள்ளவேண்டி, அவ்வப்போது தன் பரத்வத்தையும் காட்டி நின்றான். அர்ஜுனனுக்குச் சாரதியாய் தாழ நிற்கச் செய்தேயும் விச்வரூபத்தைக் காட்டினான். ஏழுபிராயத்திலே கோவர்த்தனமலையைக் குடையாகவெடுத்தான். 1.3.2

எம்பெருமானுடைய ஸௌலப்யம் நன்கு விளங்கினது அவதாரங்களில். அப்படிப்பட்ட அவதாரங்களுள்ளும் நீர்மைக்கு எல்லை க்ருஷ்ணாவதாரத்திலே. வெண்ணெய் களவுகண்டு கட்டுண்டு வருந்தி ஏங்கி நின்ற நிலையிலே அகப்பட்டு இப்படியும் ஒரு எளிமைக்குணமுண்டோ. ‘உரலினோடு இணைந்திருந்து ஏங்கிய எளிவு எத்திறம்?’ என்று சொல்லிக் கொண்டே ஆழ்வார் ஆறுமாஸம் மோஹித்துக்கிடந்தாராம்.

அவன் அடியவர்க்கு எளிதில் அறியக் கூடியவன் ஆனாலும் மற்றையோர்க்குச் சிறிதும் அறியப்போகாதவனா யிருப்பவன் 1.3.1 நல்ல எண்ணமில்லாதார்க்கு எட்டாதவன். 1.8.1

பக்தியையுடையார்க்கு எளியன், பக்த பராதீனன். ஆனால், எளியவனாயிருக்குந்தன்மை எல்லாரிடத்துங் காட்டப்பட்டால் அனர்த்தமாகுமே. ஆகவே உகந்தவர்கட்கு மாத்திரம் எளியனாய், உகவாதார்க்கு அருமைப்பட்டவனாக இருந்தால்தானே அன்பர் தேறியிருக்க முடியும்; ஆகவே, பிறர்களுக்கு அரிய வித்தகன்.

களவு வழியிலே வெண்ணெயை அள்ளி அமுது செய்து, பிடியுண்டு உரலோடே கட்டப்பட்டு, அழுது ஏங்கி நின்றதுபோலே தன் ஆப்தர்களான யசோதைப்பிராட்டி முதலானார்க்கு விதேயனாயிருந்து உகந்தவர்கட்கு மாத்திரம் எளியனாய், பூதனை, சகடம், மருதம் முதலிய உகவாதார்க்கு அணுகவுமொண்ணாது இருப்பவன். 1.3.1

பாண்டவர் போல்வார்க்குக் கையாளாயிருந்தாலும் துரியோதனாதியர்க்கு அரியவன் .1.3.2

இப்படிப்பட்ட எம்பெருமானுடைய அவதார ரஹஸ்யம் ஒருவர்க்கும் அறியப்போகாது. 1.3.3.

ஆனால், அதிசயிக்கத்தக்க ஞானத்தையுடையவர்களாலும் அறியவொண்ணாத இந்த எம்பெருமான் தன் க்ருபைக்கு பாத்திரர்களாகில் அவர்களாலே பல பல திருநாமங்களாலும் பலபல திருவுருவங்களாலும் எளிதிலறியக்கூடியவன். 1.3.4


1.8.எம்பெருமானின் திருக்கல்யாண குணங்கள்


எம்பெருமான் உயர்ந்தவையென்று பேர்பெற்ற மற்ற வஸ்துக்கள் எல்லாவற்றைக்காட்டிலும் தன்னுயர்த்தியே சாச்வதமாகும்படி உயர்ந்த கல்யாணகுணங்களை யுடையவன். ஞானமும் ஆனந்தமுமே வடிவெடுத்தவன். 1.1.1

எம்பெருமானது குணங்களிலே புகுந்துவிட்டால் ஒவ்வொரு குணத்தினுடைய அதிசயமும் எல்லைகாண வொண்ணாததாயிருக்கும்;

பரத்வத்திற்கு ஈடான குணங்களும், ஸௌலப்யத்திற்கு ஈடான குணங்களுமாக வகுக்கப்பட்டுள்ள குணங்களிலே ஒருவர் ஒரு குணத்தை அநுபவித்து அதன் அருமைபெருமைகளைச் சொல்லிக்கொண்டாட, மற்றொருவர் மற்றுமொரு குணத்தையனுபவித்து அதன் அருமைபெருமைகளை யெடுத்துரைத்துக் கொண்டாடலாம்படி இருப்பவன் அவன். 1.6.4

எம்பெருமானைப்பற்றி சொல்லுகின்ற சாஸ்த்ரங்கள் அவனை ‘அகிலஹேய ப்ரத்யநீகன்’ என்கின்றன; தீய குணங்கள் எல்லாவற்றிற்கும் அவன் எதிர்த்தட்டானவன் என்றபடி. அவனிடத்திலுள்ளவையெல்லாம் கல்யாண குணங்களேயன்றி ஒரு வகையான தீயகுணமும் இல்லாமையால் அங்ஙனஞ் சொல்லுகிறது.

வேறொரு பலனையும் விரும்பாமல் எம்பெருமானையே பரம ப்ரயோஜனமாக விரும்ப வேண்டுவது ஸ்ரீவைஷ்ணவர்களின் கடமை.

அங்ஙனம் தன்னை விரும்பாமல் வேறொரு அற்ப பலனை விரும்பி அது பெறுவதற்காகத் தன்னைவந்து பணிவாருண்டாகில், இவர்கள் பெருமாளையே பரம உத்தேச்யமாக்க் கொள்ளும் உத்தமாதிகாரிகளாக இல்லாவிட்டாலும், அப்பலனைப் பெறுவதற்கு வேறொரு க்ஷுத்ர தேவதையைத் தேடி ஓடாமல் நம்மிடம் வந்தார்களே; நம்மை உபேயமாகக் கொள்ளாவிடினும் உபாயமாகவாவது கொண்டார்களே’ என்று திருவுள்ளமுவந்து அருமையான காரியங்களைச் செய்து அவர்களது மனோரதத்தை நிறைவேற்றுபவன் எம்பெருமான். 3.7.5


எம்பெருமான் நரஸிம்ஹாவதாரம் செய்தருளினதைப்பற்றி ஒரு விசேஷார்த்த்த்தை ஆழ்வார் சொல்கிறார்.

அதாவது, ஒருவன் எம்பெருமானைத் துதி செய்கிறான், ஒருவன் நிந்தனை செய்கிறான், என்று வைத்துக்கொள்வோம்

துதி செய்பவன் நாபியிலிருந்தெழுந்த அன்போடே துதி செய்கிறானா அல்லது கபடமாக மேலெழத் துதி செய்கிறானா, என்று ஆராய்ந்து பார்ப்பதில் எம்பெருமான் ப்ரவர்த்திப்பதில்லை;

பக்தனென்று கைக்கொள்வதற்கு, ஸஹ்ருதயமாகவோ அஹ்ரூதயமாகவோ துதிசெய்தாலும், ‘இவன் துதிசெய்பவன்’ என்று துணிகிறான். பக்தன் என்று கணக்கிட சிறிது வியாஜம் கிடைத்தாலும் போதும் பெருமானுக்கு.
.
நிந்தனை செய்பவனிடத்திலோ வென்னில், இவனுக்குப் பகை உள்ளுற இருக்கின்றதா என்பதை ஆராய்ந்து பார்த்து, அப்படி யிருப்பதாகத் தெரிந்தாலொழியத் தண்டிப்பதில்லை.

ஆகவேதான், இரணியனை நெஞ்சு தொட்டுப் பிளந்து உள்ளிலும் ஆராய்ந்து பார்த்தானாம். பகவத் விஷயத்தில் அவன் பகை மேலெழ இல்லாமல் உள்ளுறவே யிருந்ததாம். அது தெரிந்த பின்பே அவனைத் தண்டிக்கலானான்.

இதன் மூலம் ஆழ்வார் விசேஷித்து அருளிச் செய்வதாவது, எம்பெருமானுக்கு அநுக்ரஹத்திலேயே அதிக நோக்கு என்கிறார்.2.6.6

எம்பெருமான் அடியார்கள் துயர்தீர, தான் துயர் தீர்ந்து இருப்பவன். அதாவது ஆச்ரிதருடைய துக்க நிவர்த்தியை தன்னுடைய துக்க நிவ்ருத்தியாக் கொள்ளுமியல்வினன்.1.1.1

"பிறர் படும் துக்கத்தைக் கண்டு தானும் துக்கப்படுகை” அவன் ஸ்வபாவம். ஸ்ரீராமாயண, அயோத்யா காண்டத்தில் ஸ்ரீராமபிரானுடைய திருக்கல்யாண குணங்களைச் சொல்லிக்கொண்டு வரும் பிரகரணத்தில் “பிரஜைகள் துக்கப்படுங் காலங்களில் ஸ்ரீராமன் மிகவும் துக்கப் படுகிறான்" என்று சொல்லப்பட்டிருக்கிறது.

மடுவின்கரையிலே முதலை வாய்ப்பட்ட ஸ்ரீகஜேந்திராழ்வானுடைய இடரை பிற்பாடு எம்பெருமான் தீர்த்தருளினானேலும் அவன் பட்ட பரிதாபம் அறிந்து கெட்டேன், கெட்டேன் என்று நொந்துகொண்டே எம்பெருமான் அரைகுலையத் தலைகுலைய ஓடிவந்தானென்றால் பாருங்களேன்!

பிறர் படுந்துயரத்தைக் கண்டு தான் துயரப்படுவது என்று நிற்காமல் அத்துயரை நீக்கவல்ல சக்தியுடைமையும் அவனிடம் உண்டு. துச்சாஸனன் கையிலே த்ரௌபதி பரிபவப்பட்டுக் கூவினபோது கண்ணபிரான் ஒருவாறு அவளது துயரைத் தீர்த்திருக்கச் செய்தேயும் ‘ஐயோ! அவள் கூவின போது நான் நேரில் சென்றிருந்து உதவாதொழிந்தேனே!, ஐயோ! அவளுக்குப் பரிபவம் நேர்ந்து அவள் கதறினபின்பு நான் அதைப் போக்கினேனேயன்றி, முதல் தன்னிலே பரிபவமே உண்டாகாதபடி ஜாகரூகனாயிருக்கை தவிர்ந்தேனே! அவளுக்கு நான் பெரிய கடனாளியாய்விட்டேனே! என்று மிகவும் வருத்தப்பட்டானாம்.

ஸஹஸ்ரநாமத்திலே விகர்த்தா என்னும் திருநாமத்தின் தாத்பர்யமாவது, தமக்காக இன்பதுன்பங்கள் இல்லாமலிருந்தும் பிறர் இன்பதுன்பங்களை அநுபவிப்பதனால் தாம் இன்பதுன்பங்களையடைந்து விகாரப்படுகிறவர் என்று பொருள்.

அதற்கேற்ப, குறையாத செல்வங்களையுடையவனும் நித்யஸித்தங்களான திருக்குணங்களையுடையவனான எம்பெருமான் பரமபதத்தில் ஸம்ஸாரிகளகிற நாம் படுகிற க்லேசத்தை அநுஸந்தித்து திருவள்ளத்தில் க்லேசத்தோடே இருக்கிறான். - 4.10.2



1.9. எம்பெருமான் உபகாரகன்


எம்பெருமான் அவனையே பரம ப்ரயோஜனமாகப் பற்றி நிற்கும் அடியார் விஷயத்திலே மஹோபகாரம் செய்தருள்பவன்; 1.7.2

அவனை அநுபவித்துக்கொண்டே யிருக்கச் செய்தே விரோதிகள் தன்னடையே கழிந்துபோவர்கள்.

தேவர்களுண்ணும் அமுதமானது இறப்பை மட்டுமே நீக்கும். ஆனால் இவனைப்பற்றிய அமுதத்தை பருகினால் மறு பிறவி நீங்கும். 1.7.3

எம்பெருமான் எவ்விதத்திலாவது நம்மைத் தன் வலையில் அகப்படுத்திக் கொள்ளும் வழியையே பார்ப்பன்; நாம் அவன்பால் நாலடி கிட்டச்சென்றால் நம்முடைய அபிநிவேசத்துக்கும் மேலாகவே அபிநிவேசங்கொண்டு அவன் நம்மைச் சூழ்ந்துகொள்வான்.

பக்தர்களைப் பொருத்த மட்டில் இப்படி எளியனாக இருப்பவன், யசோதைப் பிராட்டியின் இடுப்பிலிருக்குமாபோலே பக்கர்களின் இடுப்பிலே வந்திருத்தல் தனக்குப் பெறாப்பேறு என நினைத்து அவர்களின்இடுப்பிலே வந்தும் அமருவான். 1.9.4
அங்கிருந்து அவர்கள் நெஞ்சிலே வந்து புகுவான். 1.9.5
அநுகூலர்க்கு எளியனான எம்பெருமான் அவர்கள் நெஞ்சிலிருந்து தோளின் மீதேறி 1.9.6
அவர்கள் நாவிலே கலப்பான். 1.9.7
நாவிலே கலந்த பிறகு, புஷ்பஹாஸ ஸுகுமாரனாய், சதுர்ப்புஜனாய், சங்க சக்ரகதாகரனாய், இந்தீவரதளச்யாமனாய்ப் புண்டரீகாக்ஷனாய் தன் வடிவை அவர்கள் கண்களுக்கு இலக்காக்குவான். 1.9.8

இதுவரையில் அவனைக்காண முடியாதபடி நிரம்பிக்கிடந்த தோஷங்கள் அவனது கடாக்ஷவீக்ஷணத்தாலே மாய்ந்தனவாதலால் அவனடியார்களும் அவனை கண்ணாரக் காணப்பெருவர். இப்படியே மற்றுமுள்ள செவி முதலிய காரணங்களாலும் அவனை அநுபவிக்கப்பெறுவார்கள். 1.9.9

அவனும் தன்னுடைய குளிர்ந்தழகிய திருக்கண்களாலே அவர்களுடைய ஸகல தாபங்களும் தீரும்படி அவர்களை குளிர நோக்கியருள்வான்.

இப்படிப்பட்ட அடியார்களின் நெற்றியிலே திருமண் ரூபமாக இருந்து கொண்டு அவர்களை ஸ்ரீவைஷ்ணவதிலகமாக ஆக்கி பிரமன், சிவன், இந்திரன் முதலான மஹான்களுங்கூடத் தன்னைப் பெறுதற்கு ஸமயம் எதிர்பார்த்திருப்பாராய் இருக்கிறவன் தான் அந்த அடியார்களைப் பெறுகைக்கு அவஸரம் பார்த்துவந்து அவர்கள் தலைமீது தன் திருவடி வைத்து அனுக்ரஹிப்பான். 1.9.10


ஆனால் அவனுடைய உபாயங்களையெல்லாம் பழுதாக்கி நாம் அவனது வலைக்கு அகப்படாமல் அகன்று போவதையே விரதமாகக் கொண்டிருப்போமாகில், ஐயோ! நம் முயற்சி பலிக்கவில்லையே! என்று கண்ணீர்விட்டழுதுகொண்டே விலகி நிற்பவன் 1.8.1

துன்பம் சிறிதுமில்லாத எம்பெருமான் பரமபதத்திலே நித்யஸூரிகளோடே ஒரு நீராகக்கலந்து பரிமாறுகிறான் ஸேவை ஸாதிக்கிறான் என்றால் இதற்கு ஒரு பொருளில்லையே; ஸம்ஸாரிகளான நமக்கன்றோ துன்பம் உள்ளது. இங்கு வந்து நம்மோடு பரிமாறுகிறானென்றால் அல்லவோ பொருந்தும்; 1.8.1

அதற்காகவே இந்நிலத்திலே வந்து அவதரித்து விரோதிகளைத் தொலைந்து ஸம்ஸாரிகளுடன் கண்ணனாக வந்து பரிமாறினான் அன்றோ. இப்படி க்ருஷ்ணாவதாரஞ்செய்தருளினது மாத்திரமன்றியே இன்னமும் எத்தனையோ அவதாரங்களை செய்து தனது ருஜுத்வத்தை வெளியிட்டுக் கொண்டானென்பது ப்ரஸித்தம். 1.8.2

இரட்டைப்பிள்ளைபெற்ற தாயானவள் இருகுழந்தைகட்கும் முலை கொடுக்கப்பாங்காக நடுவே கிடக்குமாபோலே நித்யஸூரிகளுக்கும் ஸம்ஸாரிகளுக்கும் ஒருசேர முகந்தருவதற்காகவே திருவேங்கடமலையிலே நின்றருள்கிறான்.

மேலுள்ளவர்கள் சிறிதுதூரம் பயணமெடுத்துவந்து சேரும்படியாய் கீழுள்ளவர்களும் சிறிதுதூரம் சென்று சேரும்படியாய் வேங்கடமே, வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு என்கிறபடியே இருவர்க்கும் நிதியாகவுள்ள திருவேங்கட மலையில் ஸந்நிதிபண்ணியிருக்கிறான் எம்பெருமான்.

திருமலையானது மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும் பொதுவான தலமாயிருப்பதாலேயே இது ‘விண்ணோர்வெற்பு’ என்றது ஏனென்னில்; ஸம்ஸாரிகளைக் காட்டிலும் நித்யஸூரிகளே பெரும்பான்மையாக இங்கு வந்து அநுபவிப்பவர்களாதல் “மந்திபாய் வடவேங்கடமாமலை வானவர்கள் சந்தி செய்யநின்றான்” என்பர் திருப்பாணாழ்வாரும்.

திருமலையிலுள்ள பசு பக்ஷி திர்யக் ஸ்தாவரங்களையுமெல்லாம் நித்யஸூரிகளே என்று கருதுவர் பெரியோர். 1.8.3


இந்திரன் மேகங்களை ஏவி மழைபெய்வித்துத் திருவாய்பாபடியிலுள்ள சராசரங்கள் அனைத்துக்கும் பெருத்த தீங்கை விளைவித்தபோது கண்ணபிரான் சீற்றமுற்று அவ்விந்திரன் தலையை அறுத்தெறிய வல்லமை பெற்றிருந்த போதிலும், அப்பிரான் அவனிடம் சீற்றங் கொள்ளாமல் பெரும்பசியாற் பிறந்த கோபத்தினால் இப்போது இவன் தீங்கிழைக்கிறான், சிறிதுபோது கழிந்தவாறே தானே ஒய்வன். இவனது உணவைக் கொள்ளைகொண்ட நாம் அவன் உயிரையுங் கொள்ளைகொள்ளக் கூடாது எனப் பேரருள் பாராட்டி தன் அடியாரை மலை எடுத்துக்காத்து நம்போன்றவர்களுடன் நீர் போல் கலந்த ருஜுத்வகுணம் அறியத்தக்கது. 1.8.4

திருவாய்ப்பாடியில் வெண்ணெய் அவனுக்கு எவ்வளவு போக்யமாயிருந்த்தோ அவ்வளவு போக்யாமயிருந்தது பக்தர்களின் சரீரம் அவனுக்கு. ஆதலாலேயே ஆயர்களை மலை தூக்கிக்காத்தான். 1.8.5

மஹாபலியைத் தன் வசப்படுத்தி, அவன் தன்னதாக அபிமானித்திருந்த பொருள்களைத் தன்னதாக்கிக் கொண்டதுபோலவே நம்மோடே ஒரு நீராகக் கலந்து நம் ஆத்மாவைக் கொண்டு நாம் நமக்காக வாழ்கிறோம் என்கிற விருப்பைத் தவிர்ப்பான். 1.8.6

நப்பின்னைப் பிராட்டியோடு சேர, அதற்கு இடையூறாயிருந்த ஏழெருதுகளை வலியடக்கினாப்போலே நம்மோடு கலவிசெய்ய விரும்பி நம்முடைய பாபம் முதலிய பிரதிபந்தகங்களைப் போக்கியருளுவான்.

பிரளயங்கொள்ளப்புகுந்த பூமண்டலத்தைத் தனது திருவயிற்றிலே வைத்து ரக்ஷித்த்துபோல் நம்மைத் தன்னுள்ளே வைத்துக்காப்பான்.

பரமபதத்திற்குச் செல்லவேணும்’ விரஜையாற்றிலே முழுகவேணும் அங்கே ஸாமகானம்பண்ணி அவனை யநுபவிக்கவேணும், என்றிப்படியெல்லாம் நாம் பாரித்துக்கொண்டிருக்க, நம்மை ஆட்கொள்ளவேணும் என்று அவன், தான் பாரித்துக்கொண்டு நம்மிடம் ஓடிவருவான். 1.8.7

நம்மை அகப்படுத்திக்கொள்வதற்காகவே எம்பெருமான் பல திருவவதாரங்கள் செய்தான்; அங்ஙனஞ் செய்த அவதாரங்களுக்கு ஓர் எல்லையில்லை.
தன்னுடைய திவ்யாவதாரங்களுமெல்லாம் நாம் அனுபவிப்பதற்காக செய்தருளினான் 1.8.8

இப்படி நமக்காக மீன், பன்றி என்று ஸகல யோனிகளிலும் வந்து பிறந்தருளுகிறவன் தனது திருக்கைகளில் அழகிய திருவாழியும் திருச்சங்கும் ஏந்தி அவ்வழகோடுகூட வந்து பிறப்பவன். சிலரை வசப்படுத்திக்கொள்ள நினைத்தவர்கள் கையிலே மருந்தை வைத்துக்கொண்டு திரியுமாபோலே அவதாரங்கள் தோறும் திவ்யாயுதங்களோடே வந்து அவதரிப்பவன் அவன்.

மஹாபலியானவன் எம்பெருமான் நம்மிடத்திற்கு அழகிய திருகோலங்கொண்டு எழுந்தருளப்போகிறான்’ என்று கனவிலும் கருதாதிருக்கையில், அவப் பக்கலில் தானே சென்று நின்றாப்போலே (திருவீதி புரப்பாடு கண்டருளி நம் தெருவில் நம் வீடுமுன்) தானே வந்து தன் வடிவழகை திவ்யாயுதங்களை ஏந்தின அவ்வழகையும் தன் திருவடியையும் அனைவருங்கண்டு தொழும்படியாக நம் கண்ணுக்கு இலக்காக்கும் நிர்ஹேதுக க்ருபை செய்பவன். 1.10.1

பிரிவில் தரிக்கமாட்டாத பக்தியோடு தொழுதால் அவர்களது கண்வட்டத்துக்கு அப்பால் போகமாட்டாதேயிருப்பான். ஒன்று இரண்டு மூன்று என்று எண்ணிக்கொண்டே போனால் “இருபத்தாறு” என்னுமளவில் (இருபத்தினான்கு தத்துவங்களுக்குமேல் இருபத்தைந்தாவது தத்துவம் ஜீவாத்மா, இருபத்தாறாவது தத்துவம் பரமாத்மா என்பது சாஸ்திரஸித்தாந்தமாதலால்), தன்னைக்குறித்ததாகக் கொண்டுவந்து நிற்பன்; இப்படி ஏதேனுமொரு காரணம் காட்டி எம்பெருமான் நம்மைக் கைக்கொள்வதில் மிக்க வூற்றமுடையவன். ஸர்வேச்வரனுடைய இயல்பு இதுவானபின்பு இனி நமக்கொரு குறையிருக்க வாய்ப்புண்டோ? 1.10.2

எல்லா அவதாரங்களிலும் திவ்யாயுதங்கள் உண்டோவென்னில்; எங்குமுண்டு; உகவாதார் கண்ணுக்கு தோற்றாது, உகந்தார் கண்ணுக்குத் தோற்றும்.

ராஜாக்கள் நகரசோதனைக்காக மாறுவேஷத்தில் புறப்பட்டால் அந்தரங்கர்களும் வேண்டிய நேரத்திலே முகங்காட்டுகைக்காகப் பின்னாடியே இருளோடேயிருளாகத் திரிவர்கள்; ஆனால் அவர்கள் கூடவே இருக்கமாட்டார்கள்; கூப்பிட்ட குரலுக்கு ஏனென்று வந்து அணுகி நிற்கும்படியாக எங்கேனும் மறைந்து திரிவர்கள்; அதுபோலே திருவாழி திருச்சங்கு முதலான அந்தரர்களும் எம்பெருமானுடைய எந்த அவதாரத்திலும் மறைந்து கூடனிருப்பர்கள். 1.8.9

திருத்துழாய் மாலையை திருமுடியிலணிந்துள்ள ஆச்சர்ய சக்தியுக்தனான ப்ரபுவினுடைய திருவடிகளை நோக்கி மங்களாசாஸனம் பண்ணினால் அதுவே பக்தர்களை துன்புறுத்தும் எந்த நோய்க்கும் அருமையான மருந்தாகும். 4.6.3

இலேசான ப்ரபத்தி அனுஷ்டானத்துக்கு கனமான பேறாகிய பரமபதத்தை நமக்கு தருகிறார்ப்போலே, எம்பெருமானுக்கு நாம் नमः என்று சொன்னாலே "भूयिष्टांते नम उक्तिं विधेम" என்கிறபடி தனக்கு இயல்பான வாத்ஸல்யத்துடன் அவன் அதைச்சுமையாக ஏற்று "போயிற்று வல்லுயிர்ச் சாபம்" என்னும்படி நம் அனைத்து பூர்வக்ருத பாபங்களும் வெந்து போகும்படி செய்கிறான். எதிர்கால பாபங்களும் ஒட்டாமல் பார்த்துக்கொள்கிறான். 4.3.2

தம் விஷயத்தில் எம்பெருமான் பண்ணின மஹோபகாரத்திற்கு இன்னது கைம்மாறு செய்வதென்று தெரியாமல் தடுமாறுகின்றமையைத் தெரிவிக்கும் பாசுரத்திலே அவன் செய்த உபகாரம் யாதெனில், அவனையநுபவிப்பதற்கு வழிவராத தன் நெஞ்கை மாற்றிப் பதஞ்செய்வித்ததுவே மஹோபகார மென்கிறார்

முன்பெல்லாம் பெருமான் திருநாமஞ் சொல்லுவதென்றால் வேப்பங்கஷாயம் குடிப்பது போல் வெறுத்துக்கிடந்த நான், இப்போது ஒரு நொடிப்பொழுதும் இடை வீடின்றி, வாமனனே! என் மரதகவண்ணனே! புண்டாரிகாக்ஷனே! என்று பலபல திருநாமங்களையே சொல்லி உன் திருவடிகளைப்பாடியே பணிந்து, ப்ரயோஜநாந்தரங்களை விரும்பாத சுத்தமான ஹ்ருதயத்தையுடையேனாய், இனியொருநாளும் ஸம்ஸாரபந்தம் நேராதபடியாகப் பழைய தீயமனம் கெட்டுப்போம்படி பண்ணினாயே!. இங்ஙனே பண்ணின உபகாரத்தின் கனத்தைப் பார்த்தாலோ ஏதேனுமொரு கைம்மாறு செய்யாமல் தரிக்க மாட்டேன்; என்ன கைம்மாறு செய்வதென்று அறிகிலேன்; திருமகள் கொழுநனாய் அவாப்த ஸம்ஸ்தகாமனாயிருக்கின்ற உனக்கு, நான் செய்யத்தக்க தொன்றுமில்லையே! என்கிறார். 2.7.8

வேட்டையின் போது காட்டிலே தொலைந்துபோன ராஜகுமாரன் வேடன் கையிலே அகப்பட்டுத், தன் உண்மைத் தன்மையை மறந்து, வேடர் புதல்வனென்றே தன்னை நினைத்திருக்குமாப் போலே, நானும் ஸம்ஸாரத்தில் அகப்பட்டு “திருமாலே நான் உன் புத்திரன்" என்கிற நிஜஸ்வரூபத்தை மறந்தேனென்கிறார்.

பெருமானே, தேவரீருக்கும் எனக்கும் ஸ்ம்பந்தம் அநாதிஸித்தமர்கவேயிருந்தும், அந்தோ! நெடுநாளாக அதனை மறந்து பாழாய்ப் போனேனே, என்று இழந்த நாளைக்கு வருந்துகிறார். என்னாலே நான் கெட்டேன் என்கிறார்,

நான் ஒரு சூழலிலே அகப்பட்டுக்கிடக்க எம்பெருமான் என்னை வாரிப்பிடியாகப் பிடித்துக்கொள்ள எதிர் சூழலிலே புகுந்து வந்தான் என்கிறார். 2.9.9

சேதநாசேதந வர்க்கங்களையெல்லாம் ஸ்ருஷ்டி ஸமயத்திலே உண்டாக்கியும், ஸ்ருஷ்டிக்கப்பட்டவற்றுக்கு நேரும் ஆபத்துக்களைப் போக்கியும் வேண்டியதைக் கொடுத்து ரக்ஷித்தும் அவற்றினுள்ளே அந்தராத்மாவாயும் ஸ்வாமியுமாய், ஸம்ஹார ஸமயத்திலே தன்னுள்ளேயாம்படியாயும் வைத்து கண்ணபிரானான எளிமையைக்காட்டி நமக்குப் பரம போக்யனாய் ரஸிகனான எம்பெருமான் பிராட்டியோடுகூட நம்முடைய சூழலிலேயே இருக்கின்றான். 1.9.1

இப்படி சூழ்த்துக்கொண்ட காரியம் ஸம்ஸாரிகளான நம்மை அகப்படுத்திக் கொள்வதற்காகச் செய்தது. நாம் பல பிறவிகள் எடுக்கும்போது எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்து என்று பல பல திருவவதாரங்கள் செய்து பலபலமுறை நம்மை சூழ்ந்து நம்மை அகப்படுத்திக் கொள்வதற்காக முயல்கிறான். நாமும் பல பிறவிகள் பிறக்கிறோமானாலும் கருமங்காரணமாகப் பிறக்கின்றோம்; எம்பெருமான் பிறப்பது தன் கருணை காரணமாகப் பிறக்கின்றான். 1.9.2

அவன் பரமபதமாகிய தன் நித்யவிபூதியை இங்கேயிருந்து கொண்டே நிர்வஹிக்கிறான் போலும் என்னும்படி நம்மை ஒரு நொடிப்பொழுதும் விடுகிறானில்லை. 1.9.3

குற்றமே வடிவான நம்மீது எம்பெருமான் இவ்வளவு விஷே கடாக்ஷஞ் செலுத்தக் காரணமில்லையே! என்ன காரணமென்று ஆராய்ந்து பார்த்தால் எம்பெருமானுக்கு அடியார் திறத்தில் அளவிறந்த நீர்மைக்குக் காரணம் பிராட்டி ஸம்பந்தமே யென்று உணர்வீர். அவன் வெறும் மால் அல்லவே, அவன். அவன் திருமால் அன்றோ. 1.10.3

உலகுக்கெல்லாம் நிர்வாஹகன். மோக்ஷம் முதலிய ஸகல புருஷார்த்தங்களையும் அளித்தருள்பவன். , எண்ணிறந்த திருக்குணங்களையுடையவன். அக்குணங்களைக்காட்டி நம்மை ஈடுபடுத்திக் கொள்பவன். ஒருநாளுமழியாத பரமபதம் முதலிய ஸகல லோகங்களையும் தன் விபூதியாகவுடையவன். அந்த கண்ணபிரானே உலகுக் கெல்லாம் கண்ணாயிருப்பவன். 2.2.1

இங்ஙனே தாழவிட்டுப் பிறக்கிறது நமக்கு மோக்ஷமளிப்பதற்காக. ‘ஸம்ஸாரமென்பது ஒரு பெருங்கடல், அஃது எங்களால் கடக்கப்போகாது; வல்லவனான நீயே கடத்தித் தரவேணும்’ என்று வேண்டுவார்க்குக் காரியம் செய்பவன். 2.8.1

பக்தர்களனைவரையும் காத்தருள்வதாகத் தனிமாலை யிட்டுக்கொண்டு அத்விதீய நாயகனாக விளங்குபவனுமான எம்பெருமானோடுண்டான ஸம்பந்தம் போதும் துயரங்களை விளைப்பதான பிறவி முதலாக மற்றும் அபாரமான ஜராமரணாதிகளான எவ்வகைப்பட்ட துக்கமும் ஸ்பர்சியாத மோக்ஷமளிப்பதற்கு. . 2.8.2

எம்பெருமான் என்னிடத்தில் இவ்வளவு கனத்த விஷயீகாரஞ் செய்வதற்கு நான்செய்த ஸாதாநுஷ்டாநம் பெரிதாக வொன்றுமில்லை; “ஊன்வாட வுண்ணாது உயிர்காவலிட்டு உடலிற் பிரியாப் புலனைந்தும் நொத்து, தான் வாடவாடத் தவஞ்செய்யவேண்டா”என்று திருமங்கையாழ்வார் சேதநர்கட்கு உபதேசிப்பதுபோலே, எம்பெருமான் ஆழ்வார்க்கு உபதேசிப்பன்போலும்.

“உன்னை யாதொரு தபஸ்ஸிலும் கொண்டு க்லேசப்படவில்லை. மாதவன் என்று வெறுமனே வாயாற் சொன்னவளவையே கொண்டு என்னுடைய தீமைகளெல்லாவற்றையும் போக்கி ஆட்கொண்டான். எம்பெருமானுக்குப் பல திருநாமங்களிருந்தாலும், பிராட்டி ஸம்பந்தத்தை முன்னிட்டிருக்கின்ற திருநாமத்தில் அவனுக்கும் ஒரு ப்ரிதியுண்டு ஆக மாதவன் என்பதன் பொருளாவது, மா-பிராட்டிக்கு, தவன்- நாயகன் என்றபடி. பெருமானின் பல பெயர்களையும் வாயாற் சொல்லிவருமடைவிலே மாதவனென்கிற ஒரு உக்தியும் என் வாக்கில் வந்துவிட்டது; இதையே அவன் பெரிய ஸாதநமாகக் கொண்டான்போலும். 2.7.3

என்னை மாத்திமன்றியே என்னோடு ஸம்பந்த ஸம்பந்த முடையாரையுங்கூட என்னைப்போலே யாக்கின எம்பெருமானுடைய ஸாமர்த்தியம் என்னே! இரும்பைப் பொன்னாக்குவாரைப்போலே என்னை நித்யஸூரியென்னலாம்படி திருத்தித் தன்னுடையவனாகக் கைக்கொண்டு, தன்னுடைய அங்கீகாரத்திற்கு விரோதியாயிருந்த என்னுடைய பாபங்களையும் ஓடிப்போம் படி துரத்தி, என்னோடு ஸம்பந்தமுள்ளவர்கள் ஏழேழு ஜன்மமும் தன்னை அண்டும் தன்மையையுடையோமாம்படி செய்யுவிட்டானே! இப்படியும் ஒரு வல்லமை யுண்டோ. !

இங்ஙனம் மஹோபகாரகனான எம்பெருமானை ஒருநாளும் விடலாகாதென்று நம் நெஞ்சுக்கு உரைக்கிறார்.

நெஞ்சமே, பலபடியாலும் நமக்கு எம்பெருமான் செய்தருளிய உபகாரங்களை அநுஸந்தானஞ் செய்து கொண்டே, அவனை வணங்கு.



1.10 அவன் லக்ஷ்யம் – நம்மை அடைவதே


நமக்காக க்லேசப்படுகின்ற எம்பெருமான் ஸ்ரீவைகுண்டத்திலோ அல்லது திருப்பாற்கடலிலோ எழுந்தருளியிருக்குமிருப்பு நமக்கு இவ்வுலகத்தில் உபயோகப்படுவதன்று;

ராம கிருஷ்ணாதி அவதாரங்கள் பண்ணின காலத்தில் நாம் அணுகியிருந்து வாழப்பெற்றிலோம்;

அப்படியாக, அவன் நமக்காக எங்கோ இருந்துகொண்டு க்லேசப்படுவதனால் நமக்கு என்ன ப்ரயோஜனம்?’

இந்த கேள்விக்கு விடையாக ஆழ்வார் சொல்வதாவது,

ஒருவனைப் பிடிக்க நினைத்து ஊரைவளைவாரைப் போலே நம்மை பிடிப்பதற்காக நம்மைச்சுற்றி எங்கும் வ்யாப்தனாகி நின்கிறான். 4.3.8

மேலும் நம்மை அடைவதற்காக அவன் அர்ச்சாரூபியாகி நம்மிடையே திருமலை பெருமாள் கோயில் முதலான கோயில்களில் காத்துக்கிடக்கிறான்.

பரமபதத்திலும் திருப்பாற்கடலிலும், திருமலை பெருமாள் கோயில் முதலான கோயில்களிலும் எம்பெருமான் இருப்பதன் நோக்கமே ஸமயம்பார்த்து பக்தர்களின் நெஞ்சிலே வந்து சேர்வதற்காகவே. எம்பெருமானுக்கு, பரமபதம் முதலியவற்றில் வாஸம் உபாயமாயும் பக்தருடைய ஹ்ருதயத்தில் வாஸமே அவன் லக்ஷ்யமாயும் உள்ளது. பெரிய திருவந்தாதி 68

மேலும் நாம் யாதொன்றை அவனுக்கு ரூபமாக நினைக்கிறோமோ அதையே தன் திவ்யரூபமாகக் கொண்டருளி நம் க்ருஹங்களிலே சித்திரமோ, விக்ரஹமோ, ஸாளக்ராமமோ, நாமுகந்ததொரு த்ரவ்யத்தில் எழுந்தருளப்பண்ணி ஆச்ரயித்தால் அதையே தன் திருமேனியாகக்கொண்டு உகந்து எழுந்தருளி நம்மை அனுக்ரஹிக்கிறான். 3.6.9

தன்னைப்பொருத்தவரையில் ஆழ்வார் சொல்வதாவது, இதுவரையில் தான் பல யோனிகளிற் பிறந்தும் அப்பெருமானுக்கு தன்னை வசீகாரிக்கைக்கு உறுப்பான சிறு வ்யாஜமுங் கிடைக்கவில்லையாம். இந்தப் பிறவியில்தான் இவரைக் கைக்கொள்வதற்கு ஒரு சிறு வ்யாஜம் அவனுக்கு கிடைத்ததாம். இப்படி ஜீவாத்மாக்களை அனுக்ரஹிக்காமல் விஷயீகாரிகாமல் இருப்பது அவனால் முடியாது என்கிறார் ஆழ்வார். 2.7.6

அநாதிகாலந் தொடங்கி இன்றளவும்வரை எம்பெருமான் எடுத்த அவதாரங்களெல்லாம் அவன் பக்கலிலே நாம் ஊன்றுகைக்காக. அதற்காக அவனைத் தவிர வேறு எந்த உபேயமும் உபாயமும் நாம் வேண்டாதபடி அவனையே துதித்துப்பாடி ஆடும்படியாக நம்மை திருத்திப் பணிகொள்ளும் பொருட்டு, நாம் பிறந்த பிறவிகள் தோறும் தானும் எதிரே வந்து நம்மை வசீகாரிக்கைக்கீடான வடிவுகளைக் கொண்டு பிறந்தருளி நமக்கு வலை போடுகிறான். இதற்கு காரணம் அவன் பரம க்ருபையே.

ஒரு சேதநனை எம்பெருமான் வசப்படுத்திக் கொள்ளத் திருவுள்ளம்பற்றினால், அதற்காக அவன் பல திருவவதாரங்கள் செயயவேணுமோ? அவன்தானே வாரிப்பிடியாகப் பிடித்துக்கொள்ளுமளவில் தடுப்பாரில்லையே. அப்படியிருக்க, இவரை வசீகாரிக்க அவன் பல பிறப்புகளை பிறந்தருளினதாகச் சொல்லுகிற இது எப்படி? என்று சிலர் சங்கிப்பதுண்டு.

இதற்குப் பெரியோர் பணிப்பதாவது-எம்பெருமான் கேட்பாரற்ற ஸ்வதந்திரம் உள்ளவனேயாகிலும் ஒரு வ்யாஜமாத்திரமாவது ஒரு காரணமாவது வேண்டும் என்று ஒரு வரம்பு இட்டுக் கொண்டிருக்கிறான்; 2.7.5

இவ்வித்தில் மற்றொரு கேள்வி. பக்தர்களை ரக்ஷிக்க எம்பெருமான் அவதாரம் செய்ய வேணுமோ?

ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களையெல்லாம் தன் ஸங்கல்பத்தாலே நிர்வஹித்துப் போகின்ற பரம சக்தியுக்தனான எம்பெருமான் அந்த ஸங்கல்பத்தைக் கொண்டே ஸாது பரித்ராணமும் செய்தருளக் கூடாதோ;

“மஹர்ஷிகள் வாழ்க; ராவணாதிகள் மாள்க.” என்று பரமபதத்தில் வீற்றுருந்தபடியே ஸங்கல்பிக்குமளவால் தலைக்கட்டமாட்டாத காரியமில்லையே.

அப்படியிருக்க, ஏதுக்கு நாட்டில் பிறந்து படாதன படவேணும்?

அதற்கு ஆழ்வார் சொல்வதாவது,

ஸாதுக்களை ரக்ஷிப்பதாவது என்ன? அவர்களது அநிஷ்டங்களைத் தவிர்த்து இஷ்டங்களைக் குறையறக் கொடுத்தருள்வதுதானே அவர்களை ரக்ஷிப்பது.

எம்பெருமானை நேரில் ஸேவிக்கப் பெறவேணும் என்பதுதானே அவர்களின் ப்ரார்த்தனை. இதை எங்ஙனே ஸங்கல்பத்தினால் தலைக்கட்ட முடியும்? நேரில் எழுந்தருளி ஸேவை ஸாதித்தேயாக வேண்டுமன்றோ.

ஸ்ரீகஜேந்திராழ்வான் முதலையின் வாயிலகப்பட்டுத் துடித்து ‘ஆதிமூலமே’ என்று கதற அக்கூக்குரல் கேட்டு அரை குலையத் தலைகுலைய மடுவின் கரையிலே வந்துநின்ற எம்பெருமானை நோக்கி என்றேனுமொருநாள் அழிந்தே போகக்கூடியதான இந்த வுடலைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நான் கரைந்தேனில்லை; எம்பெருமானே உன்னை நேரில் ஸேவித்து உன்றன் பொன்னடிகளில் இத்தாமரை மலர்களைப் பணிமாறுவதற்காகவே கரைந்தேன் என்றான்.

இப்படிப்பட்ட பக்தசிரோன்மணிகளின் ஆசையை ஸங்கல்பத்தினால் தலைக்கட்டுதல் எங்ஙனே ஸாத்யமாகும்? இருந்தவிடத்தேயிருந்து ஸங்கல்பத்தைக்கொண்டே ரக்ஷித்தால் அடியார்க்காக ஓடிவந்து உதவுமவன்’ என்கிற ப்ரஸித்தியாலுண்டாகும் தேசு மறைந்தொழியுமன்றோ 3.1.9

Comments

Popular Posts