அடியார் பெருமை

அடியார் பெருமை

------------------------------------------------------------

ஆழ்வார்களிடையே அதிகம் பரிவு கொண்டவர் பெரியாழ்வார். பெருமாளிடத்து தாய்மைப் பரிவு. அடியார்களிடத்து அசாத்தியமான நம்பிக்கை.தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாளாகிலும் சிதகுரைக்குமேல் -என்னடியார் அதுசெய்யார் செய்தாரேல் நன்று செய்தாரென்பர் போலும் -மன்னுடைய விபீடணற்கா மதிளிலங்கைத் திசைநோக்கி மலர் கண் வைத்த -என்னுடைய திருவரங்கற்கன்றியும் மற்றொருவர்க்கு ஆளாவரே?.(பொதுவாகவே தனது சுபாவத்தினால் எப்படிப்பட்ட தவறினைச் செய்பவர்களையும் மன்னிக்கும் குணம் பொருந்தியவள் பெரியபிராட்டியார். அவளே ஒருவர் மீது குற்றம் சொன்னாலும், அதற்கு பெரியபெருமாள், 'என் அடியார்கள் அதுபோன்ற குற்றங்களை செய்ய மாட்டார்கள். அவ்வாறு செய்தார்கள் என்றாலும் அது நன்மை பயப்பதற்காகவே இருக்கும்' என்று தாயாரின் சொற்களுக்கு அடியார்கள் பொருட்டு மறுப்பு தெரிவிப்பவனும், செல்வப் பெருமைகள் நிறைந்த விபீடணனுக்காக மதிள்கள் உடைய இலங்கை உள்ள தெற்குத் திசை நோக்கி தன்னுடைய குளிர்ந்த மலர் போன்ற கண்களை வைத்தருளும் என்னுடைய பெரியபெருமாளுக்கு அல்லாமல் வேறு யாருக்காவது அடியவராக இருந்தால் அவர்கள் விவேகம் பெற முடியுமோ?)”யதா ராஜா ததா பிரஜா” - 'அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி” என்ற ஒரு வசனம் உண்டு!. அதுபோன்று தன்னடியார்கள் மீது அளவற்றக் கருணையுள்ளவன் அரங்கன். இந்த ரெங்கராஜாவை சதா தியானிக்கும் ஆழ்வார்கள் குணமும் அது போன்றுதானேயிருக்கும்? குலசேகர ஆழ்வார்; தன்னடியார்கள் மீது தான் கொண்ட அசைக்கமுடியாத நம்பிக்கையின் விளைவாக, அவர்கள் சார்பாக, விஷப்பாம்பு குடத்தில் தானே கைவிட்டார். இவரோ ஒரு நாளும் அரங்கன் அடியார்கள் குற்றம் செய்யார் என்று உறுதியளிக்கின்றார். எந்த அபவாதத்தையும் அரங்கன் பொறுத்துக் கொள்வான் - ஆனால் தன்னடியார்களை எவரேனும் பழிப்பராகில் ஒருபோதும் விடமாட்டான். அதற்குண்டான கடுமையானத் தண்டனையைக் கொடுக்க தயங்கமாட்டான். கூரத்தாழ்வான் தன் கண்களை தன்னை தண்டித்த இராஜாவின் முன் பிடுங்கி எறிகின்றார். பின்னர் அவரைச் சார்ந்தவர்கள் மிக்க வருத்தப்பட்டு கதறுகையில் அவர்களிடம் 'என்றாவது ஒரு நாள் ஏதோ ஒரு அடியவரின் நெற்றியிலுள்ள திருமணைப் பார்த்து கோணலாகயிருக்கின்றதே! என்று இந்த கண்ணால் பார்த்து நினைத்திருப்பேன். அந்த நினைவு இப்போதுள்ள இந்த நிலைமைக்குக் காரணமாகயிருந்திருக்கும்!” என்று அவர்களை தேற்றுகின்றார். தன் கண்கள் பறிபோனதற்குக் காரணமாயுள்ள இராஜாவைக் குறை கூறவில்லை! தன் பூர்வ ஜன்ம பாவம் என்று கூட கூறவில்லை! நினைத்திருக்கின்றாரோ இல்லையோ? நினைத்திருப்பேன் என்று எவ்வளவு ஒரு சிறிய செயலுக்கு எவ்வளவு பெரிய தண்டனையை ஈடாக்கின்றார் பாருங்கள்!. வைணவத்திலுள்ள பெரிய பெருமையே இதுதான். அரங்கன் தொடங்கி ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள், அடியவர்களின் மீது கொண்ட அதீத அன்பு, அரவணைப்பு, பாசம்! எங்கு சென்றாலுமே 'அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ......” என்றுதான் கோஷம்!. வைணவத்தின் ஆனிவேர் அரங்க நகர். இது எப்படி பொலிவுறும் என்றால் அடியார்கள் ஒரு குறைவுமின்றி வாழ்ந்தால்தான்! குறைவின்றி யாரால் வாழ வைக்கமுடியும்? யாரால் இது சாத்தியம்? - அரங்கனைத் தவிர வேறு யாராலும் முடியாது. அவனுடைய கடமையும் கூட! அதனால்தான் இவன் 'வந்தாரை வாழ வைக்கும் பெருமாள்!”.

Comments

Popular Posts