மேட்டழகிய சிங்கர் ஸந்நிதியும், ஐந்துகுழி மூன்று வாசலும்

நன்றி: பாஞ்சஜன்யம் ஆசிரியர் ஸ்ரீ கிருஷ்னமாச்சாரியார்
___________________
மேட்டழகிய சிங்கர் ஸந்நிதியும், ஐந்துகுழி மூன்று வாசலும்
==========================================================


1) நான்காம் திருச்சுற்றான ஆலிநாடன் திருச்சுற்றிற்கும், ஐந்தாம் திருச்சுற்றான அகளங்கன் திருச்சுற்றிற்கும் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள கோபுரத்தில் எழுந்தருளியுள்ளார் எடுத்தகை அழகியசிங்கர்.

2) அவர் கோபுரத்தின் இடைப்பகுதியில் எழுந்தருளியிருப்பதாலும், அவரை சென்று ஸேவிப்பதற்குப் படிக்கட்டுகள் மீதேறி செல்லவேண்டியிருப்பதாலும் இந்த ஸந்நிதிக்கு மேட்டழகிய சிங்கர் என்ற பெயர் அமைந்துள்ளது.

3) ஸ்ரீபராசரபட்டர் “அஹமலமவலம்பஸ் ஸீததாமித்யஜஸ்ரம், நி வஸதுபரிபாகே கோபுரம் ரங்கதாம்ந:, க்வசந ந்ருபரிபாடீவாஸிதம், க்வாபி ஸிம்ஹ க்ரமஸுரபிதமேகம் ஜ்யோதிரக்ரே சகாஸ்தி”. (ரங்கராஜஸ்தவம்-47), 4)(“ஸம்ஸாரத்தில்) துலங்குகின்றவர்களுக்கு நானே போதுமான கைப்பிடிகொடுக்குந் துணைவன்” என்று (தெரிவிப்பது போன்று) ஸ்ரீரங்கமந்திரத்தினுடைய கோபுரத்தின் மேற்புறத்தில் எப்போதும் வஸிப்பதும், (கழுத்துக்குக் கீழ்ப்பட்டதான) ஒரு பக்கத்தில் மநுஷ்ய வடிவோடு பொலிந்திருப்பதும் (கழுத்துக்கு மேற்பட்டதான) ஒரு பாகத்தில் சிங்க வடிவோடு பொலிந்திருப்பதுமான ஒரு பரஞ்சோதி கண்ணெதிரே விளங்குகின்றது. மற்ற எம்பெருமானைப் போலே கீழ்நிலத்தில் எழுந்தருளியிராமே மேட்டு நிலத்தில் எழுந்தருளியிருக்குமிருப்பை நோக்கி னால் ‘ஆவாரார் துணையென்று அலைநீர்க்கடலுளழுந்தும் நாவாய்போல் பிறவிக்கடலுள் நின்று துளங்கும் ஸம்ஸாரிகளுக்கு நானே கைப்பிடிகொடுத்து உய்விக்கவல்லேன்’ என்று தெரிவிப்பவர்போன்றிருக்கின்றனராம் மேட்டழகியசிங்கர். திருமேனி ஒருபடியும் திருமுகம் ஒருபடியுமாய் (நரங்கலந்த சிங்கமாய்)பொலிகின்ற ஒரு பரஞ்சோதி இதோ கண்முன்னே தோன்றுகின்றது என்றாராயிற்று.

5) தாயார் ஸந்நிதிக்கு எதிரில் தென்பகுதியில் அமைந்துள்ளது மேட்டு அழகியசிங்கர் ஸந்நிதி. ஐந்துகுழி மூன்று வாசல் பகுதியின் வடக்குப் பகுதியில் ஒரு கோபுரம் அமைந்துள்ளது.

6) ஐந்துகுழி மூன்று வாசலின் தத்துவம்: மூன்று வாசல்கள் சித், அசித், ஈƒவர தத்துவங்களைக் குறிக்கும்.

7)பரமாத்ம, ஜீவாத்ம தத்துவங்களையும் அந்த ஜீவாத்மா கைக்கொள்ள வேண்டிய உபாயத்தையும், அந்த உபாயத்தைக் கைக் கொள்ளும் போது ஏற்படுகின்ற தடைகளும், அந்தத் தடைகள் நீங்கி அடைய வேண்டிய பேற்றினையும் ஐந்து குழிகள் குறிக்கின்றன. இவற்றை அர்த்தபஞ்சகஞானம் என்பர். ஐந்து குழிகளிலே ஐந்து விரல்களை வைத்துத் தெற்குப்பகுதி கோபுரத்தின் வழியாக எட்டிப்பார்த்தால் பரமபத வாசல் தெரியும். அதுவே ஜீவாத்மா பெறவேண்டிய பேறான அந்தமில் பேரின்பம். இந்தத் தத்துவங்களை உள்ளடக்கி அமைக்கப் பெற்றதே ஐந்து குழி மூன்று வாசல்.

படிதாண்டா பத்தினியான ஸ்ரீரங்கநாச்சியார் இந்த இடத்திற்கு வந்து வைகுந்தவாசலை எட்டிப் பார்க்கிறாள் என்பது கட்டுக்கதை.

9) தத்வத்ரய ஞானம் ஏற்பட்டால் அதன் விளைவாகப் பெறப்படுவது அர்த்த பஞ்சக ஞானம். ஐந்து உண்மைப் பொருளை அறிந்தவன் அந்தமில் பேரின்பமாகிய மோக்ஷத்தை அடைவான் என்பதை விளக்க ஏற்பட்டதே ஐந்துகுழி மூன்று வாசல்.

10)அந்தக்கோபுரத்திலே எழுந்தருளியுள்ளார் அழகியசிங்கர். ஹிரண்ய கசிபுவினை மடியிலே இருத்தி, அவனது குடலைக் கிழித்திடும் திருக்கோலத்தில் அழகியசிங்கர் எழுந்தருளியுள்ளார்.

11) அதே சமயம் பிரஹ்லாதாழ்வானுக்குத் தன் கைகளை உயர்த்திக் காட்டி அபயமளித்திடும் திருக்கோலத்தில் அழகியசிங்கர் எழுந்தருளியிருப்பதால் இவருக்கு எடுத்தகை அழகியசிங்கர் என்ற திருநாமமும் உண்டு.

12) ஆகம விதிகளின்படி திருக்கோபுரங்களிலே அழகியசிங்கர் பல திருக்கோலங்களிலே எழுந்தருளியிருப்பார்.

13) திருமங்கையாழ்வார் ஆலிநாடன் திருச்சுற்று மதிளைத் திருப்பணி செய்திடும்போது திருக்கோபுரத்தில் எழுந்தருளியிருந்த அழகியசிங்கர் அவருக்கு நேரில் ஸேவை ஸாதித்தார். அதனால் அந்தக் கோபுரத்தில் எழுந்ருளியுள்ள அழகியசிங்கருக்கு அவரே தனி ஸந்நிதி அமைத்து வழிபட்டார்.

14) அந்தத் திருக்கோயில் விமானம், மண்டபம் ஆகிய அமைப்புகளை மலையாள ராஜாவான சேரன் குமரன் மலையப்பப்பெருமாள் கட்டுவித்தான்.

15)மேட்டுஅழகியசிங்கர் ஸந்நிதியின் சுற்றுச்சுவர்களும் திருமண்டபமும் ஹொய்சாள மன்னனான வீரநரசிங்க தேவர் கைங்கர்யம். இங்கே குறிப்பிடப்படுபவன் ஹொய்சாள மன்னனான இரண்டாம் வீரநரசிம்மன். (கி.பி. 1220-1235)இவனே அகளங்கன் திருச் சுற்றில் அமைந்துள்ள திருக்குழலூதும் பிள்ளை (வேணுகோபாலன்) ஸந்நிதியை நிர்மாணித்தவன்.)

16) மேட்டுஅழகியசிங்கர் ஸந்நிதியில் திருமண்டபம், படிக்கட்டுகள், திருமடைப்பள்ளி ஆகியவை ஆகுளூர் வரநாதராயர் கைங்கர்யம்.

17)இந்தியாவிலும் மேல்நாட்டிலும் அமைந்துள்ள எந்தத் திருக்கோயிலிலும் கோபுரத்தின் மீதுள்ள அழகியசிங்கருக்கு என்று தனி ஸந்நிதி கிடையாது. தனித்தன்மை பெற்றது மேட்டழகிய சிங்கர் ஸந்நிதி. கம்பராமாயண அரங்கத்தின்போது அதைக் கேட்டு மகிழ்ந்தவர் இவர். அதனால்தான் கம்பநாட்டாழ்வான் வால்மீகி ராமாயணத்தில் இல்லாத இரணியன் வதைப்படலத்தை கம்பராமாயணத்தில் சேர்த்தாகப் பெரியோர்கள் கூறுவர். ***

அரங்கநாத சுவாமி தேவஸ்தானத்திற்காகத் தொகுத்தவர்: ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ அ.கிருஷ்ணமாசார்யர்.

Comments

Popular Posts