ஆசார்யன் உபதேசம்
திருவரங்கன் ரங்கநாயகி தாயார் திவ்ய தம்பதிகளின்
சங்கல்பத்தால் தினமும் அவர்களின் திருவருள் பெறத்-
துதிக்கும் பாராயணம்:

ஸ்ரீமதே ராமானுஜாய நம:
(ஆசார்யன் உபதேசம்)
சேதனம் அசேதனம் ஆகிய எல்லாப்பொருட்களுக்கும் ஸ்வரூபம் உண்டு. ஸ்ரீமன் நாராயணனின் திருவுள்ளப்படி அவை -தோன்றுகின்றன;தொடர்கின்றன;செயல்படுகின்றன.
ஸ்ரீமன் நாராயணனின் திருவடிகளை அடயவேண்டியதே நான் அடைய வேண்டிய பலன்.
அவனை அடைய எம்பெருமானையே உபாயமாகத் தெரிந்து கொண்டு சரணமடைகின்றேன். என் சம்சார பந்தம் எம்பெருமான் ப்ரீதியால் வந்தது. ஸாஸ்த்திரங்களில்  விதிக்கப்பட்ட கருமங்கள் அவன் கட்டளையாகையால், அவைகளைச் செய்ய தவற மாட்டேன்.
எம்பெருமான் ஸர்வக்ஞன், ஸர்வஸக்தன். என் மஹா அபராதங்களால் அவனை அணுகமுடியாவிடினும், பெரிய
பிராட்டியின் பரிவுரையால்-என் அபராதங்களை க்ஷமித்துவிட்டான்.
என் ப்ரபத்திக்கு வஸப்பட்டு  என் கருமத்துக்குத் தக்க பலனுக்கு பதிலாக அளவில்லாத பலனைத் தருகிறான்.
எம்பெருமானால், விரும்பிப் பெறமுடியாததொன்றில்லை.
அவனுக்குப் பிறர் உபகாரம் தேவையில்லை. ஆயினும் என் சிறிய செயலுக்கு மகிழ்ந்து பலன் தருகிறான். என் பிரபத்தியை
ஏற்று நான் விரும்பும் காலத்திலேயே பலனைத் தருகிறான்.
ஒப்பிலாத எம்பெருமான், என்னையும் பொருளாக ஏற்று, என் சரணாகதியை ஏற்று பலன் தருகிறான்.
பிரபத்தியின் ஐந்து அங்கக்களையும் எப்போதும் பாராயணம் பண்ணுகிறேன்.
என்னுடைய கர்மங்களான் ஸஞ்சிதம் ,பிராரப்தம் பிரபத்தியால் கழிந்தன. பிரபத்தியின் பெருமையால், தேவர்களின், முனிவர்களின், பித்ருக்களின் கடன் ஆகியவற்றிலிருந்து விடுபட்டேன்.
என் பக்தி ஞானம் மேன் மேலும் வளர, ஆசார்யர்களைப் பிரார்த்திக்கிறேன். பிரபத்தியால், என் கடமை நிறைவேறியது.
ஸ்ரீமன் நாராயணன் அடியேனுடைய பொறுப்பை ஏற்றுக்கொண்டு விட்டான். எனக்கு பொறுப்பு சிறிதுமின்றி நீங்கிவிட்டது. பின் விளைவுகளைப்பற்றிய அச்சம் ஒழிந்து விட்டது. அவனுக்குப் ப்ரீதியான கைங்கர்யங்களைச் செய்து கொண்டு சுகமாயிருக்கிறேன்.
=============================
ஓம் நமோ நாராயணாய:   ஸ்ரீமன் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே ஸ்ரீமதே நாராயணாய நம: சர்வ தரமான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ , அகம் தவா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச:
என்றும் அடியேன் உமது அடிமையன்றோ! என்றும் உம்மையே தஞ்சமாகப் பற்றினேன் அன்றோ! என்றும் உமக்கே தொண்டுகள் அனைத்தும் செய்யக் கடவேன்...என்று சொல்லும்  சரணாகதி மந்த்ரத்தை சொல் அளவிலாவது உச்சரிக்கும் என்னைத் ஸம்சார ஸாகரத்தைத் தாண்டும்படி செய்யவேண்டும்.
மனத்தாலும் வாக்காலும் உடலாலும் அனாதிகாலமாகப் பண்ணிப்போந்தவையும், தர்மங்களுக்கு ஒவ்வாத செய்கை, வர்ணாஸ்ரம தர்மங்களுக்கு ஒவ்வாத செய்கை, அவைகளை அனுஷ்டியாமை,பகவான்-பாகவதர்களிடம் செய்த அபசாரங்கள் அனைத்து குறைகளையும் பொறுத்தருள வேண்டும்.
நான் எல்லாம் செய்ய வல்லவன்....இது போன்ற தவறான நினைவுகளையும் ....எல்லாம் உன் ப்ரீதியின் பொருட்டு என்பதை மறந்து, எனக்காக நானே செய்கிறேன் என்று நினைத்துச் செய்யும் எனக்கும் என் புத்ராதிகளுக்கும் உன் ப்ரீதிக்கு ஒவ்வாத நடத்தை இவை  இனி நேர்ந்தாலும்தேவரீர் பொறுத்துத் திருத்தி அருள வெண்டும்.
எண்ணற்ற குற்றங்களுக்கு இருப்பிடமாகவும்,பயங்கரமான ஸம்ஸார ஸாகரத்தில் விழுந்தனாகவும், உன்னைத்தவிர வேறு கதியற்றவனாகவும், ஸரணாகதன் என்று   சொல்லிக்கொள்பவனாகவும்  இருக்கிற அடியேனை
உன்னுடையவனாகக் கொள்வாயாக. உன்னையே ஸரணமடைந்த  என்னை ரக்ஷிப்பாயாக:
ஒவ்வொருவருடைய தலையிலும் பிரும்மா அவர்கள் விதியை எழுதுகிறான். அவ்வெழுத்தை மாற்றி நன்மையே விளைவிக்கவல்லன உன் திருவடித்தாமரைத்துளிகள். பிரமன் முதலிய தேவர்களும் உன் திருவடித்தூள்களைத் தன் முடியில் தாங்கிப் போற்றுகின்றனர். இத்துணைப் பெருமை பெற்ற உன் திருவடித்தூள்களின் அணுக்கள், என் முடியிலும் படிந்து மிகுதியான திருவருளை என் பால் சுரக்க வேண்டும். நான் ஒரு கலையும் அறியாதவன். புண்ணிய தீர்த்தங்களில் நீராடிப் புண்ணியங்கள் சம்பாதிக்கவில்லை.ஆசார்யார்களிடம் பயிற்சி பெறவில்லை.உன் திருவருளே என்னைப்போன்ற அகதிகளை உய்விக்கிறது.உன் திருவருளைப்பெற அடியேன் முற்றிலும் தகுதிஉள்ளவன். உன்மேலுள்ள மஹா விஸ்வாஸம் உறுதியானது. அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச் சிறுபேரழைத்தனவும் பொறுத்தருளி கடாக்ஷிக்கப் பிரார்த்திக்கிறேன்.
ஆசார்யன் திருவடிகளே சரணம்:




  

Comments

Popular Posts