வைஷ்ணவனுக்கோர் லட்சணம்

Thanks to the Link:    http://thirumozi.blogspot.com/2010/07/blog-post.html
__________________


  வைஷ்ணவனுக்கோர் லட்சணம்


அருளாட்சியின் அருமை பெருமைகள்
ஜோசப் கேம்பல் தொன்மறைகளில் பொதிந்துள்ள உருவகப் பேச்சை அதன் உள்ள பொருள் தெளியும் படி சொல்லுவார். இது அவர் இந்தியவியல் கற்றுக்கொண்ட பின் தீவிரமானது. பிறப்பால் ஐரீஷ் கத்தோலிக்கர் என்பதால் அவருக்கு விவிலியம் அத்துபடி. ஒருமுறை ஏசுவின் வாழ்வின் நடந்த நிகழ்வொன்றைச் சொல்லிக்கொண்டு வந்தார். ஏசுவிடம் சீடர்கள் வந்து,’ஐயா! பரமபிதாவின் அருளாட்சி பூமியில் நடக்குமென்று சொன்னீர்களே! எங்கே?’ என்றனராம். ஏசு பதிலாக, ‘மூடர்களே! அவனது அருளாட்சியில்தான் இத்தனை காரியங்களும் நடந்து வருகின்றன. ஏன் உங்கள் கண்களுக்கு அது தெரியவில்லையா?’ என்றாராம்.

ஏன் நம் கண்களுக்குத் தெரியவில்லை என்பதை விளக்கப் புக்கால் ஆன்மீகம் விரியும். எளிய பதில் ‘மாயை நம் கண்ணை மறைக்கிறது’ என்பதுதான். அது என்ன ‘மாயை’ என்று கேள்வி வரும், பின் அப்படியே தத்துவ விசாரம் விரியும்! அது நல்லதுதான். கேள்விகள் உவப்பானவை. நல்ல கேள்விகள் உவப்பானவை. முடிச்சுப்போடும் கேள்விகள் கேட்டு செக்குமாடு மாதிரி ஒரே இடத்தில் நின்று கொண்டு இருக்கக்கூடாது. எல்லாக் கேள்விகளுக்கும் விடை அக்கேள்வியிலேயே உண்டு என்பார் ஜே.கிருஷ்ணமூர்த்தி.

இவ்வளவு பேச்சும் எதற்கு என்றால், ஒரு பெரியவர் இருக்கிறார் அவரைக் காண்பதே அலாதி ஆனந்தம். ஆனால், நமக்கோ நேரமில்லை. தெருவில் போய்க்கொண்டு இருக்கும் போது போக்குவரத்தை நிறுத்தி அவர் வந்து எதிர் நின்றால் எப்படி இருக்கும்? நம் பயணம் தடை பட்டாலும், நாம் கண்டு ஆனந்திக்க வேண்டுமென்ற ஆவல் நிறைவேறி விடுகிறது இல்லையா?

அது போல்தான் பார்த்தசாரதி செய்தான். திருவல்லிக்கேணியில் அக்காவைப் பார்க்கப் போய் கொண்டு இருந்தேன். கோயிலுக்குப் போக நேரமில்லை. கோயில் பக்கம் வந்தவுடன் கார் மேலே போகாது நின்றுவிட்டது. ‘சரிதான், பெருமாள் புறப்பாடு போலும்’ என நினைத்து இறங்கி நின்றால் ஜில், ஜில்லென்று குதிரை வாகனத்தில் அவரே வந்து நிற்கிறார். இதைத்தான் ‘அருளாட்சி’ என்கிறார் ஏசு. நமக்கோ நேரமில்லை. அவரும் ரொம்ப பிசியான ஆசாமிதான். ஆனாலும் நமக்காக நேரம் ஒதுக்கிக்கொண்டு வந்து நிற்கிறார் எனில் அதை அருள் என்று போற்றுவதுதானே சரி.

சரி, அவர் உனக்கு மட்டும் வந்தார் என்று எப்படிச் சொல்ல? என்று கேட்கலாம். உண்மைதான் அவர் எல்லோருக்காகவும்தான் வருகிறார். ஆனால், எனக்குத்தான் அவர் என்னைப் பார்க்க வந்ததாகத் தோன்றுகிறது. கூடவே ஒரு அம்மாள். பாவம், அவளுக்கு என்ன அவசரமோ! இங்கும், அங்கும் நெளிந்து பெருமாள் கண்ணிலிருந்து படாமல் ஓடிவிட முயன்று கொண்டிருந்தாள். ஆனால் முடியவில்லை. வழியே இல்லை. கோபத்துடன் அவள் பெருமாள் இருப்பதையே கண்டு கொள்ளாமல் திரும்பி நடந்துவிட்டாள். அவளைப் பொறுத்தவரை அங்கு நடப்பது ‘அருளாட்சி’ இல்லை, வெறுமே போக்குவரத்து தொந்தரவு. அப்படியும் காணலாம்தான். நம் கண்ணில்தான் இருக்கிறது பார்வை. எனவேதான் மாணிக்கவாசகர் மிகச்சாதுர்யமாக, ‘அவன் அருளால் அவன் தாள் வணங்கி’ என்றொரு சொற்றொடர் போடுகிறார். அவன் நம்மைப் பார்க்க வருகிறான் என்று உணர வைப்பதும் அவனே. மாயையைக் கண்ணில் கட்டி விரட்டி விடுபவனும் அவனே. எனவேதான் நம்மாழ்வார் வைகுந்தம் போகிற வரைக்கும் தன் இயலாமை குறித்து வருந்தி, என்னை கடைசி நேரத்தில் ஏமாற்றிவிடாதே என்று புலம்புகிறார்.

மாயம்செய் யேலென்னை உன்திரு மார்வத்து மாலைநங்கை
வாசம்செய் பூங்குழலாள் திருவாணை நின்னாணை கண்டாய்
நேசம்செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம்செய் யாதுகொண் டாயென்னைக் கூவிச்கொள் ளாய்வந்தந்தோ.


இது கடைசிப் பத்து. அப்போதும் சந்தேகம்! ஏனெனில் விஷ்ணு மாயை என்பது காட்டமானது. பெரும் தவமிருந்து மனதைக் கட்டியதாய் நம்பி இருந்த ஒரு பெரும் முனிவருக்கு இறுதிக்காலத்தில் இறைவன் நினைவு வராமல் ஒரு மானின் மீது ஆசை வர, அவர் மானாகப் பிறந்ததாக ஒரு கதை சொல்வார்கள். இப்படியெல்லாம் செய்யக் கூடியவர்தான். இதனால்தான் பார்த்தார் இராமானுஜர், ‘நீ! ஏண்டா ஏதோ உன் சாமர்த்தியத்தால் சாதித்துவிடுவது போல் அலட்டிக் கொள்கிறாய்? பேசாமல், நிர்கதி என்று சொல்லி அவன் காலில் விழுந்துவிடு! பின் உன் நன்மை, தீமை எல்லாம் அவன் பழியாகிவிடும்’ என்று சொல்லிப் போந்தார். இராமானுஜ தரிசனத்தில் பரம சௌக்கியமுண்டு. ஏனென்று கேட்கிறீர்களா? உலகில் இதுவரை நீங்கள் பார்த்ததில், எங்காவது குட்டி/குழந்தை தன் முயற்சியில் தாயைப் பேணியதுண்டோ? தாய்தான் குட்டியை/குழந்தையைப் பேணுகிறாள். ஏனெனில் அவளுக்குத்தான் தன் குழந்தை மீது அக்கறை! (குரங்கு கட்டிக் கொள்கிறதே என்று கேள்வி வரும். அங்கும் பால் நினைந்தூட்டுவதும், குட்டியின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிப்பதும் தாய்தான். அது பிள்ளைக்கும் தெரியும். குட்டி இறந்து போனபின் அக்குட்டியை வைத்துக் கொண்டு அல்லாடும் ஆவணங்களெல்லாம் உண்டு. அப்போது குட்டி கட்டிக் கொள்ளவில்லை. தாய்தான் யாரையும் அண்டவிடாமல் காக்கிறாள் (குட்டி இறந்துவிட்ட பின்னும்))

எனவேதான் சொன்னேன், ‘பார்த்தசாரதி என்னைப் பார்க்க வந்தான்!’ என்று. ஏன் வந்தான்? அவனை ஸ்ரீரங்கத்தில் காண வேண்டுமென்று ஆசை. மலை வையாவூரில் காண வேண்டுமென்று ஆசை, மதுராந்தகத்தில் காண வேண்டுமென்று ஆசை. ஆசை, ஆசை கொள்ளை ஆசை! ஆனால் செம்மொழி மாநாடு, தமிழ் மரபு அறக்கட்டளை வேலைகள் என் நேரத்தை முழுமையாய் அபகரித்துவிட்டன. இந்தக் கையறு நிலையில், என் மாயை என்னைக் கட்டிப் போட்டாலும் அம்மாயையைக் கிழித்துக் கொண்டு அவன் அருளாசி வருவது எவ்வளவு சிறப்பு? சென்னை வாழ்வில்,’சாமியாவது, பூதமாவது’ என்று வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது. இத்தனை அவசரத்திலும், அவன் பல்லக்கு வைத்துக் கொண்டு நம்மைக் காண வருகிறான் என்பதுதான் சிறப்பு.

எப்படி வருகிறான்? நான் மதுரைவாசி. எங்களுக்கு உற்ற துணை திருமால் இரும் சோலை அப்பன். அவனோ கள்ளழகன். அக்காட்சியில் காலம் கழித்தவர்கள். எனவே சென்னையில் வந்து காட்சி கொடுக்கும் போதும் அவன் பார்த்தசாரதியாக வராமல் கையில் சாட்டையுடன் குதிரை மீதேறி கள்ளழகர் ஆற்றில் இறங்குவது போல் வருகிறான். அது அவன்தானா? என்று சந்தேகம் வருமானால், குதிரைக்கடியில் ‘கருப்பணசாமி’ (விஷ்ணு பூதம்)கையில் அரிவாளுடன் நிற்கிறார். பிறகென்ன சந்தேகம்? நமக்கு எங்கே சந்தேகம் போகிறது? அக்காவைப் பார்த்து உலவளாவிய பின்னும் அவர் விடுவதாயில்லை. வாசலில் புறப்பாடு என்று வந்து நின்றோம்.

அன்று ஏதோ ஊசலாம். திருமங்கை ஆழ்வார் பெரிய திருடனாம். வழியில் போகும் பெருமாளிடம் எல்லாவற்றையும் கொள்ளையிடுவதாக நாடகம். பெருமாள் துரத்த, திருமங்கை ஓட. பெருமாள் கொஞ்சம் இளைப்பாறும் போது பட்டியியல் இடுகிறார்கள். என்னென்ன திருடிக்கொண்டு போயிருக்கிறாரென்று. உண்மையில் அங்கு பெரிய கள்வன் பெருமாள்தான். ஏனெனில் கன்னம் போடுபவனின் உள்ளதைக் கவர வந்துள்ள கள்வன் இவர்தான். அதுதான் கடைசியில் நடக்கிறது. இது அசடு, கலியன்! எல்லாம் திருடிவிட்டதாய் எண்ணிக்கொண்டு கடைசியில் பார்த்தால் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறது. கோஷ்டி பலமாக வாடினேன், வாடி வதங்கினேன்!! என்று சாற்றுகிறது. அதுதானே உண்மை. துயர் இடும் பெரும் பையில் விழுந்தவுடனே நம் வாடுதல் ஆரம்பித்துவிடவில்லையோ? இப்படியெல்லாம் அனுபவித்துக் கொண்டிருக்கையில் வந்தார் ஒரு பாகவதர். நம் திருமலை விஞ்சாமூர் வேங்கடேசன் எனும் மின்தமிழ் அன்பர். அவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது ஏதேட்சையாக அவரும் சொன்னார், ‘உம்மைப் பார்க்க பெருமாள் வந்திருக்கார் ஓய்!’ என்று.

இவையெல்லாம் சம்பிரதாயமாகச் சொல்லும் வார்த்தை என்றுதான் இதுவரை எண்ணிவந்தேன். ஆனால் அருளாட்சியின் பூடக உலகில் இம்மாதிரி நிகழ்வுகளை சம்பிரதாயமாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. மிகவும் துல்லியமான தனிச்சேதி என்றே கொள்கின்றனர். இதை விளக்க ஸ்ரீரங்கம் முரளி பட்டரின் வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்று. அவரிடம் யாரோ அங்கிருக்கும் சில சம்பிரதாயங்களை விளக்கக் கேட்க இவரும் ஒரு புதுப்பொருள் சொல்ல, பின்னால் அவருக்கே சந்தேகம் வந்துவிட்டது. தாம் சொன்னது சரியா? தவறா? என்று. அங்கு வந்த கிருஷ்ணப்பிரேமி ஸ்வாமிகளிடம் அவர் கேட்க, ஸ்வாமிகள் நீ எங்கிருந்து இதைச் சொன்னாய்? என்று கேட்டிருக்கிறார். சந்நிதியில் என்றிருக்கிறார் முரளி பட்டர். பின் என்ன சந்தேகம்? பேசியது நீ அல்ல, அவன் என்று விளக்கியிருக்கிறார். ஸ்ரீரங்க வரலாற்றில் இப்படி அர்ச்சகர் மூலமாக அவனிட்ட கட்டளைகள்தான் எத்தனை? அவன் நம்முடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறான். ஆனால் நமக்குத்தான் ‘அவன்’ பேசுகிறான் என்று புரிவதில்லை.

அர்ச்சகர் என்றவுடன் இன்னொரு சம்பவம். என் பெண் ஸ்வேதாவிற்கு ஆண்டாள்தான், ‘கோயில் ஆழ்வான்’ என்று பாட்டி சொல்லிவிட்டார்கள். அவளுக்கு ஆண்டாள் மீது தனிப்பிரியம். பொதுவாகவே அவளுக்கு அம்பாள் கிருபை என்றும் உண்டு. அம்மூர்த்திகளே அவளைக் கவர்கின்றன. நியூயார்க்கில் (பிள்ளையார் கோயில்) நான் கிருஷ்ணன் அழகில் லயித்திருக்க இது சரஸ்வதி சந்நிதிமுன் அழுது கொண்டு நிற்கிறது! அப்படித்தான் அவள் ஸ்ரீரங்கம் ஆண்டாள் சந்நிதிக்குள் நுழைந்த நிமிடத்திலிருந்து ஆழி மழைக் கண்ணீர் விடத்தொடங்கிவிட்டாள். பாவம் அர்ச்சகர்! ஏதோ குழந்தைக்கு சோகமென்று விசாரித்து இருக்கிறார். இவளுக்கென்ன சோகம்? ஆண்டாளின் அருளாட்சியின் மழையில் நனையும் போது கண்கள் தானாக தாரை வார்க்கின்றன. துன்பம் மட்டும் கண்ணீர் வரவழைப்பதில்லை ஆனந்தமும் கண்ணீரைத்தான் வரவழைக்கிறது என்று அவருக்கு இவளால் புரிய வைக்க முடியவில்லை.

இப்படி ஆனந்த பாஷ்பம் செய்வது அடியார் பழக்கம். இதுவொரு பாகவத பாவம்

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன்
பாடி அலற்றுவன்,
தழுவல் வினையால் பக்கம் நோக்கி
நாணிக் கவிழ்ந்திருப்பன்,
செழுவொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்.
செந்தா மரைக்கண்ணா,
தொழுவன் னேனை யுன்தாள் சேரும்
வகையே சூழ்கண்டாய். 5.8.5


இப்படி தசபாவங்களுண்டு என்று பாகவதமும் சொல்கிறது.

செம்மொழி மாநாட்டில் நண்பர் அண்ணா கண்ணன் தன் அன்னையை அறிமுகப்படுத்தினார். ஆழ்வார்கள் மீதான என் காதலை அவரிடம் சொன்னார். நானும் குலசேகர ஆழ்வாரின்

வாளா லறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல்நோ யாளன்போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் விற்றுவக்கோட் டம்மாநீ
ஆளா வுனதருளே பார்ப்ப னடியேனே 5.4


எனும் பாடலைப் பற்றிச் சொல்ல அவர் கண்கள் பனித்தன.பின்னொரு சமயம் சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் திருவேங்கடமணியுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது அவரது தாயார்,

கற்பகமே விழிக் கருணை பொழிந்திடும் கமலக் கண்ணழகும்
காரிசுதன் கழல் சூடிய முடியும் ககனச் சிகை முடியும்
எப்பொழுதும் எதிராசர் வடிவழகு என் இதயத் துளதால்
இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிரே!


என்று சொல்லி கண்ணீர் உகப்பர் என்று சொன்னார். அது என்ன? ஒன்று சொன்னார் போல், வைணவர்களுக்கு அடியார் பெயர் சொன்னால், ஆண்டவன் பெயர் சொன்னால் பொல, பொலவென்று கண்ணீர் வந்துவிடுகிறது? இப்படியானதொரு மனப்பக்குவத்தை எப்படி நம் பெரியோர் தமிழரிடம் உண்டாக்கினர்? அதுவும் செந்தரமாக்கப்பட்ட செவ்வியல் பதிப்பு போல் சாதி வேறுபாடு இல்லாமல், வைஷ்ணவனுக்கோர் லட்சணம் இது என்பது போல். புதுவையில் கி.ராவுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது வேடிக்கையாகச் சொன்னார், ‘இவனுகளுக்கு ரொம்ப அகந்தை ஓய்! தானொரு வைஷ்ணவனென்று! அது போகாதவரை உங்களுக்கு வைகுந்தம் இல்லை! என்று நான் சொல்வதுண்டு’ என்றார். அப்பேச்சின் ஊடாக வெளிப்படுவதும் இந்தக் கர்வமே! அதுவொரு தேவையான திமிர் போல்தான் எனக்கென்னமோ படுகிறது! திருவல்லிக்கேணியில் தெற்கு ரத வீதியில் நடந்த பெருமாள் புறப்பாடும், பெருமாளைத் தூக்கித் திணவெடுத்த வைணவர்களின் தோள் புடைப்பும், இடைவேளையில் கம்பத்திற்குக் கம்பம் ஓடி விளையாடும் சிறார்களின்ன் குதூகலமும், நடு இரவைத்தொட்டு விட்டது என்பது கூட மறந்த நிலையில் அங்கிருந்த ஆனந்தமும், இன்று இப்போது கொரியாவிலிருந்து எண்ணும்போது ஏதோ இன்பக்கனா போல் தோன்றுகிறது. பூகோள வைகுந்தம் என்பது என்னவென்று அன்று ஸ்ரீரங்கத்தில் உணர்ந்தேன். பிறிதொரு சமயம் திருவல்லிக்கேணியில் உணர்ந்தேன். ஏசு பேசுகின்ற அருளாட்சி இதுதான் என்று திரும்பச் சொல்ல வேண்டுமோ?

Comments

Popular Posts